https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/11/6/w600X390/gun_AP23307640971610.jpgமக்களுக்கு ஆயுதங்கள் - இஸ்ரேல் திட்டம்: அமெரிக்காவிடம் 24 ஆயிரம் துப்பாக்கிகள் கொள்முதல்!

அமெரிக்காவிடமிருந்து எளிதில் இயக்கக் கூடிய, ஆனால் ஆற்றல்மிக்கதான ஏகே 47, எம் 16 போன்ற 24 ஆயிரம் தாக்குதல் துப்பாக்கிகளைக் கொள்முதல் செய்வதற்காக இஸ்ரேல் அரசு ஆர்டர்களை வழங்கியுள்ளது.

இதுபற்றிய தகவலை ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ இணைய தளம் வெளிப்படுத்தியிருக்கிறது.

இஸ்ரேலில் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் தேசப் பாதுகாப்புத் துறை அமைச்சரான இடாமர் பென்-க்விர், இஸ்ரேலிய மக்களுக்குத் தாக்குதல் துப்பாக்கிகளைக் கொடுத்து, “பாதுகாப்புப் படை”களை உருவாக்கி வருகிறார்.

இஸ்ரேலின் ஆயுத வேண்டுகோள் பற்றி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிசீலித்து வருகின்றனர். வன்முறை அதிகரித்துவரும் மேற்குக் கரைப் பகுதி நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக பாலஸ்தீன மக்களைத் துரத்திவிட முனையும் இஸ்ரேலிய குடியேற்றத்தினரிடமும் மக்கள் படையிடமும் இந்த ஆயுதங்கள் சென்றடையும் என்றும் சில அமெரிக்க அரசுத் துறை அலுவலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மூன்று தொகுப்புகளாக ஓரளவு தானியங்கி மற்றும் முற்றிலும் தானியங்கித் துப்பாக்கிகளுக்கு – சுமார்  34 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 282.93 கோடி) பெறுமதியுள்ள ஆயுதங்களுக்கு நேரடியாக அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களிடம் ஆர்டர்களை இஸ்ரேல் வழங்கியுள்ளது.

எனினும், இதற்கு அமெரிக்க வெளியுறவுத் துறையின் அனுமதி பெற வேண்டும், காங்கிரஸுக்கும் அறிவிக்க வேண்டும். தேசிய காவல்துறைதான் இந்த துப்பாக்கிகளைப் பயன்படுத்தப் போவதாக இஸ்ரேல் தெரிவித்தபோதிலும் ஆயுதங்களைக் கையாளத் தெரிந்த மக்களுக்கும் வழங்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளதாக நியூ யார்க் டைம்ஸுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. 

இதையும் படிக்க | இஸ்ரேல்: இந்தியா நிலை மாறுவது ஏன்?

இந்த ஆயுத விற்பனை பற்றிக் கடந்த வாரமே காங்கிரஸ் குழுக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை தகவல் தெரிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்தே, அரசு வட்டாரங்கள் கவலை கொண்டிருப்பதுடன், இந்த துப்பாக்கிகள் எவ்வாறு பயன்படுத்தப்படவுள்ளன என்பது பற்றி இஸ்ரேலிடம் கடினமான வினாக்களை எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

வெளியுறவுத் துறையிலுள்ள மனித உரிமைப் பிரச்சினைகளைக் கையாளும் அலுவலர்கள் இந்த விற்பனையில் தயக்கம் காட்டியபோதிலும், விரைவில் உயர் அலுவலர்கள் இந்த விற்பனைக்கு ஒப்புதல் வழங்கி அறிவிப்பு வெளியிடுவார்கள் என்றும் அமெரிக்க அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளிலும் மேற்குக் கரையின் ஆக்கிரமிப்புப் பகுதிகளிலும் மக்களுக்கு ஆயுதங்களை வழங்குவதென திட்டமிட்டுள்ள நிலையில் தங்களுடைய ஆயுத இருப்பை அதிகரிக்க இஸ்ரேலிய காவல்துறை நினைக்கிறது.

இந்தப் பகுதிகளில் பெருமெடுப்பாக 27 லட்சம் பாலஸ்தீனர்கள் வசித்துக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த பல ஆண்டுகளாகக் குடியேற்றப் பகுதிகளில் சுமார் 5 லட்சம் இஸ்ரேலியர்கள் குடிபுகுந்து, ராணுவ காவல்சாவடிகளுடனும் கம்பி வேலிகளுடனும் வாழ்ந்து கொண்டுள்ளனர்.

காஸா மீதான வான்வழித் தாக்குதல்கள் நடத்தும் இஸ்ரேல் தொடர்பாகக் கடும்  விமர்சனங்கள் நிலவும் நிலையில், மேற்குக் கரைப் பகுதியில் அதிகரிக்கும் வன்முறைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் உயர் அலுவலர்களும் கவலை கொண்டுள்ளனர். 

இதையும் படிக்க | இஸ்ரேலின் சிதைந்த ஈகோவும் நெதன்யாகுவின் இழந்த செல்வாக்கும்: தொடரும் காஸா தாக்குதலின் பின்னணி!

ஆயுத விற்பனைகளைக் கையாளும் அமெரிக்க வெளியுறவுத் துறை அலுவலர்கள், இதுபற்றி இஸ்ரேலிய வெளியுறவுத் துறையினருடனும் பேசியுள்ளனர். இவை – இந்தத் துப்பாக்கிகள் யாவும் – ஐ.என்.பி. கட்டுப்பாட்டிலுள்ள அணிகளுக்கே வழங்கப்படவுள்ளன என்று இஸ்ரேலியர்கள் உறுதியளித்துள்ளதாக இஸ்ரேலிய தேசிய காவல்படையை மேற்கோள் காட்டி அமெரிக்க அரசியல் – ராணுவப் பிரிவு துணைச் செயலர் ஜெஸ்ஸிகா லெவிஸ் தெரிவித்துள்ளதாகவும் தி டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஐ.என்.பி. கட்டுப்பாட்டிலுள்ள அணிகள் என்றால் என்னவென்பது பற்றி விரிவாக எதுவும் தெரிவிக்கப்படாவிட்டாலும் இவை எதுவும் மேற்குக் கரையில் செயல்படவில்லை என்று இஸ்ரேலிய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், குடியேற்றப் பகுதிகளின் மக்களுக்குத் துப்பாக்கிகளை வழங்கப் போவதாகக் காவல்துறைக்குப் பொறுப்பான தேசப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இடாமர் பென்-க்விர் கடந்த மாதம் உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. 

இதையும் படிக்க | தகவல் தொடர்புகளை மீண்டும் இழந்தது காஸா - உள்நுழையும் இஸ்ரேலிய வீரர்கள்!



from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/02TFGf6

Post a Comment

Previous Post Next Post