https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/11/4/w600X390/hippopotamus_AP23307051532376.jpgநீர்யானைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? கொலம்பியாவின் துயரம்!

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பிரச்சினை. கொலம்பியாவின் பிரச்சினை வித்தியாசமானது. எப்படியோ வந்துசேர்ந்துவிட்ட நீர்யானைகளை எப்படி கொலம்பியாவிலிருந்து வெளியேற்றுவது என்பதுதான் அது!

1980-களில் போதைப் பொருள் வர்த்தகத்தில் செல்வாக்காக இருந்த பாப்லோ எஸ்கோபார் என்பவர், சட்டவிரோதமாக கொலம்பியாவுக்குள் கொண்டுவந்த நீர்யானைகளால் பல்கிப் பெருகிய 100-க்கும் மேற்பட்ட நீர்யானைகள்தான் இதன் பிரச்சினை.

இந்த நீர்யானைகளின் எண்ணிக்கையை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்யும் கொலம்பியா அரசு, கருத்தரிப்பு தடுப்பு ஏற்பாடுகள், வேறு நாடுகளுக்கு அனுப்பிவிடுவது மட்டுமின்றிக் கருணைக் கொலை பற்றியெல்லாம் யோசிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

எஸ்கோபார் எஸ்டேட்டிலிருந்து அருகிலுள்ள ஆறுகளில் நுழைந்து பல்கிப் பெருகிவிட்ட இவற்றை வேட்டையாடிக் குறைக்கக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய வேறு உயிரினங்கள் எதுவும் இங்கே இல்லை. கொலம்பியாவின் இயற்கை சுற்றுச்சூழலைக் குலைத்துவிடக் கூடிய இந்த விலங்குகளை ஆக்கிரமிப்பு உயிரினங்கள் என்று கொலம்பியா அறிவித்திருக்கிறது.

இதையும் படிக்க: அமேசானில் வறட்சி! ஆறுகள் வற்றின, குடிநீருக்கே தட்டுப்பாடு!!

கொலம்பியாவில், குறிப்பாக மகதலேனா ஆற்றுப் படுகையில், 169 நீர்யானைகள் இருப்பதாகக் கொலம்பியா கணக்கிட்டுள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்காவிட்டால், 2035 ஆம் ஆண்டில் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து ஆயிரத்தைத் தொட்டுவிடும் என்றும் அஞ்சப்படுகிறது.

திட்டத்தின் முதல் கட்டமாக ஆண்டுக்கு 40 நீர்யானைகளுக்குக் கருத்தரிப்புத் தடுப்பு அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அடுத்த வாரத்திலேயே வேலைகள் தொடங்கும் என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சுசானா முகமது தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த நடவடிக்கை அதிக செலவாகக் கூடியது. ஒவ்வோர் அறுவைச் சிகிச்சைக்கும் 9,800 டாலர்கள் செலவாகும் என்பதுடன், மயக்க மருந்து செலுத்துவதால் ஒவ்வாமை காரணமாக நீர்யானையின் உயிருக்கும் ஆபத்து நேரிடலாம், மேலும், விலங்குப் பணியாளர்களும் பாதிக்கப்படும் அபாயமுள்ளது. பெரிய நிலப்பரப்பில் இந்த நீர்யானைகள் இருக்கின்றன என்பதுடன் மிகவும் ஆவேசமானவையாகவும் உள்ளன.

ஆக்கிரமிப்பு விலங்குகளான இவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வெறும் அறுவைச் சிகிச்சை மட்டுமே போதுமானவையல்ல என்பதால், பிற நாடுகளுக்கு இந்த நீர்யானைகளை அனுப்பிவைப்பது பற்றியும் ஏற்கெனவே கொலம்பிய அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறது.

இதையும் படிக்க: மோனா லிசாவின் மற்றொரு ரகசியம்!

மெக்சிகோ, இந்தியா, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளை கொலம்பிய அரசு அலுவலர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இந்தியாவுக்கு 60 நீர்யானைகளை அனுப்புவது பற்றிப் பேச்சு நடத்திவருகிறது என்று அமைச்சர் முகமது குறிப்பிடுகிறார்.

நீர்யானைகளை அனுப்புவதற்காக முறைப்படியான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். பெற்றுக்கொள்ளவிருக்கும் நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் ஒரு விலங்கைக்கூட அனுப்ப மாட்டோம் என்றும் அமைச்சர் சுசானா முகமது தெரிவிக்கிறார்.

நீர்யானைகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கடைசிக் கட்ட நடவடிக்கையாகக் கருணைக் கொலை தொடர்பான நடைமுறைகளையும் அமைச்சகம் சிந்தித்துவருகிறது.

1980-களில் எஸ்கோபாரின் தனிப்பட்ட விலங்கியல் பூங்காவான ஹசியந்தா நபோலிஸுக்கு கொஞ்சம் நீர்யானைகள் கொண்டுவரப்பட்டன. 1993-ல் பாப்லோ எஸ்கோபாருடைய மறைவுக்குப் பிறகு இது பெரிய சுற்றுலா தலமாக மாறிவிட்டது.

இதையும் படிக்க: வட அமெரிக்காவில் 22 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடித் தடங்கள்!

பெரும்பாலான நீர்யானைகள் இந்தப் பகுதி ஆறுகளில் எவ்விதக் கட்டுப்பாடுமின்றித் திரிவதுடன் ஏராளமாகக் குட்டிகளையும் ஈன்றுவிட்டன. சில நேரங்களில் சில நீர்யானைகள் அருகிலுள்ள புயர்த்தோ டுரின்போ நகர வீதிகளில் சர்வசாதாரணாக அலைந்து திரிவது பலரும் காணக்கூடிய காட்சியாகிவிட்டது.

இந்த நீர்யானைகளின் சாணத்தால் ஆறுகளின் தன்மை மாறிவிடுவதுடன் உள்ளூர்நீர்வாழ் உயிரினங்களான கடற்பசு, காபிபோரா போன்றவற்றின் இருப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

நாடுகள் எல்லாம் மனிதர்களை நாடு கடத்துவது பற்றிதான் கேள்விப்பட்டுள்ளோம். கொலம்பியாவோ நீர்யானைகளைக் கடத்திவிடுவது பற்றித் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறது.



from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/jBxGYC8

Post a Comment

Previous Post Next Post