https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/11/16/w600X390/train_cancel1.jpegஒரே எஸ்எம்எஸ், மொத்த பயணத் திட்டமும் அவுட்! ரத்து செய்யப்பட்ட சண்டீகர் எக்ஸ்பிரஸ்!

ஒரே ஒரு குறுஞ்செய்தி மூலம் நூற்றுக்கணக்கான பயணிகளின் ஒட்டுமொத்த திட்டமிடலையும் குலைத்துப் போட்டிருக்கிறது ரயில்வே.

பொங்கலுக்குப் பிந்தைய நாளில் புறப்படும் மதுரை – சண்டீகர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலை திடீரென ரத்து செய்திருக்கிறது ரயில்வே. இதனால், சென்னையில் தொடங்கி சண்டீகர் வரையிலான நகர்களுக்குச் செல்ல வேண்டிய ரயில் பயணிகள் தொங்கலில் விடப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகரிலும் வாழும் மக்களில் பெரும் பகுதியினர் வெளியூர்களில் இருந்து வந்தவர்களே. இதேபோல, தமிழ்நாட்டிலிருந்து ஏராளமானோர் பிற மாநிலங்களுக்குச் சென்று பணிபுரிகின்றனர், குடியேறியுள்ளனர்.

சென்னையில் மட்டுமே இப்போதும் பல லட்சங்களில் மக்கள் வெளியூர்களிலிருந்து வந்து தங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களில் 90 சதவிகிதத்தினர் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக இன்னமும் தங்கள் சொந்த ஊர்களுக்கு - வெளியூர்களுக்கு சென்று வருபவர்களே.

தீபாவளி, பொங்கல் என்றாலே இவர்களுக்குப் பெரிய சோதனைதான். வயிற்றைக் கலக்கும் திகில் பரவிவிடும். ஏனென்றால், ஊருக்குச் செல்லவும் திரும்பவும்  டிக்கெட் எடுப்பதில் இருக்கும் சிரமம்.

ரயில்களில் மட்டுமே சென்றுவரக் கூடியவர்களின் நிலைமைதான் மிகவும் மோசம். 

இதையும் படிக்க | சான் பிரான்சிஸ்கோவில் அபெக் மாநாடு! அதுசரி, அபெக் என்றால் என்ன?

ரயில் பயணத்துக்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே (120 நாள்களுக்கு முன் முன்பதிவு தொடங்கும்), நாள் பார்த்து, ரேஸ் போல போட்டிபோட்டு, சரியாகக் காலை 8 மணிக்கு, ஐஆர்சிடிசி இணையதளத்திற்குள் புகுந்து டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.

இவற்றின் வழி டிக்கெட் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. எந்த அளவுக்குக் கடினம் என்பது இவ்வாறு டிக்கெட் எடுக்கிற ஒவ்வொருவருக்கும் நன்றாகவே தெரியும்.

பெரும்பாலான விழாக் காலங்களில் இதுபோன்ற நாள்களில் இணைய தளம் திணறும். இல்லாவிட்டால் வங்கிகளின் இணையதளம் முழுகிவிடும். எல்லாம் சரியாக இருந்து, ஒருவேளை டிக்கெட்டும் இருந்தால்தான் பயணம் நிச்சயம்.

கிடைக்கிற ரயிலில், கிடைக்கிற டிக்கெட்டை எடுக்க வேண்டியதுதான். கிடைக்கிற இந்த டிக்கெட்டுகளின் அடிப்படையில்தான், சென்னையிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பிற ஊர்களுக்குச் சென்றுவர வேண்டிய நிலையில் இருக்கும் குடும்பங்கள் ஒவ்வொன்றும் தங்கள் பயணத்தையே திட்டமிடுகின்றன – எல்லாம் 4 மாதங்களுக்கு முன்!

இப்படியாகத்தான் எதிர்வரும் பொங்கலுக்கும் டிக்கெட் எடுப்பதில் ஏராளமான கஷ்டங்கள் இருந்தன. நினைத்த நாளில் கிடைக்காத ஒவ்வொருவருமே டிக்கெட்  கிடைத்த நாளுக்குத் தக்கவாறு திட்டமிட்டுக் கொள்வார்கள்.

வரும் ஜன. 15 பொங்கல்.

பொங்கல் நாளுக்கு முன் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்கள் அனைத்துமே முன்பதிவுகளால் நிரம்பி வழிய இப்போதும் காத்திருப்பவர்கள் ஆயிரக்கணக்கானோர். இதேபோல, பொங்கல் முடிந்த பிறகு சென்னைக்கும் பிற நகர்களுக்கும் திரும்பத் திட்டமிட்டு முன்பதிவு செய்திருப்போரும் காத்திருப்போரும் பல ஆயிரங்கள்.

இத்தகைய சூழ்நிலையில், திடீரென, நவ. 14 ஆம் தேதி மாலை 7 மணிக்கு ரயில்வே நிர்வாகத்திடமிருந்து மதுரை – சண்டீகர் எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் 17.1.2024 புறப்படும் ரயில்வண்டி எண் 12687 ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமத்துக்கு மிகவும் வருந்துகிறோம்.

அவ்வளவுதான்.

பொங்கல் முடிந்த இரண்டாம் நாள் ஜன. 17. தெற்கிலிருந்து சென்னை நோக்கி – பெரு நகர்களை நோக்கிச் செல்லும் அத்தனை ரயில்களுமே நிரம்பிதான் வழியும். ஏற்கெனவே, இரு மாதங்களுக்கு முன் தொடங்கிய 4 நிமிஷங்களிலிருந்து 10 நிமிஷங்களுக்குள் முன்பதிவு எல்லாம் காலியாகிக் காத்திருப்புக்குச் சென்றுவிட்டது.

இந்த நிலையில், திடீரென ஒரு ரயிலையே ரத்து செய்தால் அந்த ரயிலில் முன்பதிவு செய்திருப்பவர்களின் நிலை என்ன? சாதாரண காலம் என்றால்கூட ஏதோ மாற்று ரயில்களில் முயற்சி செய்யலாம் அல்லது சென்னை போன்ற நகர்களுக்குச் செல்வோர் என்றால் அரசு, தனியார் பேருந்துகளைப் பிடிக்கலாம். பொங்கல் முடிந்த நாளில் பயணிகளின் நெரிசல் எப்படியிருக்கும்? சென்னை முதல் சண்டீகர் வரை திரும்பத் திட்டமிட்டிருந்த நூற்றுக்கணக்கான பயணிகளால் என்ன செய்ய முடியும்? எப்படித் திரும்புவார்கள்? இனி எப்படித் திட்டமிடுவார்கள்? 

இதையும் படிக்க | 2022-ல் மட்டும் உலகில் 75 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு!

மதுரையிலிருந்து வாரத்துக்கு இரண்டு முறை மட்டுமே இயக்கப்படுகிற இந்த மதுரை - சண்டீகர் விரைவு ரயில், சென்னை, விஜயவாடா, வாரங்கல், சந்திரபூர், நாக்பூர், போபால், ஜான்சி, குவாலியர், ஆக்ரா, மீரட், அம்பாலா வழியே சண்டீகர் செல்கிறது. இப்படி எத்தனை ரயில் நிலையங்கள்? எவ்வளவு பயணிகள்? ரயில்வே நிர்வாகத்தையும் இந்த ரயிலையும் நம்பிதானே எல்லாவற்றையும் திட்டமிட்டிருப்பார்கள்?

பயணத்துக்கு இன்னும் இரு மாதங்கள் இருக்கும் நிலையில் (முன்பதிவு செய்தும்  இரண்டு மாதங்களாகிவிட்டன!) அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே, மாற்று ஏற்பாடு செய்ய முடியாத அளவுக்கு என்ன தவிர்க்க முடியாத மோசமான சூழல் ரயில்வே போன்ற பெரிய நிர்வாகத்துக்கு வந்துவிட்டிருக்கும்?

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைச் சரிசெய்து உடனடியாக மாற்று ஏற்பாடுகளைச் செய்து மதுரை – சண்டீகர் அதிவிரைவு ரயிலை வழக்கம்போல இயக்குவது மட்டுமே ரயில்வே மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும்! பயணிகளின் துயரத்தையும் போக்கும்!



from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/cu597Ee

Post a Comment

Previous Post Next Post