ஏவிஎம்மின் காக்கும் கரங்கள் (1965) படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் சிவகுமார்!
அப்போது படத்துக்கு அவர் பெற்ற ஊதியமாகப் பெற்ற தொகை ஆயிரம் ரூபாய்தான்.
பிறகுதான் ஒரு படத்துக்கு ஐயாயிரம் ரூபாய் வீதம் படிப்படிப்பாக ஊதியத்தை உயர்த்தி வந்திருக்கிறார் சிவகுமார்.
அன்னக்கிளியும் பத்திரகாளியும் அடுத்தடுத்து வெளியாகி வெள்ளிவிழாக் கொண்டாடி சக்கைப்போடு போட்டன.
இதையும் படிக்க: பார்க்கிங் படத்தின் முதல் பாடல் எப்போது?
அதைத் தொடர்ந்து, சிவகுமாரின் சொற்களிலேயே கூறினால், ‘பலாச் சுளையை ஈ மொய்ப்பது போல’ பல தயாரிப்பாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, ஒவ்வொருவரும் தொகையை உயர்த்தி, தங்கள் படங்களுக்கு சிவகுமாரை ஒப்பந்தம் செய்யப் போட்டி போட்டனர். எவ்வளவு கேட்டாலும் கொடுக்கும் நிலையில் தயாரிப்பாளர்கள் இருந்தனர். வாங்கும் தகுதி சிவகுமாருக்கும் இருந்தது. ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.
“ஆனால், அன்று அப்படிச் செய்திருந்தால் இன்று சிவகுமாரைப் பூதக்கண்ணாடி கொண்டுதான் தேடிப் பிடிக்க வேண்டும்” என்று 1980-களில் சொன்னவர் வேறு யாரும் அல்ல, சிவகுமாரேதான்.
சினிமா எக்ஸ்பிரஸுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறுகிறார்:
“ஒரு படம் ஓகோவென்று ஓடிவிட்டால் ரேட்டை எக்கச்சக்கமாக ஏற்றிக்கொண்டு, ‘எனக்கு நிறைய படங்கள் இருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு கால்ஷீட்டே இல்லை’ என்று கூறி, அதற்காகப் போலி டைரி ஒன்றை எழுதிவைத்துக் கொண்டு அதைத் தயாரிப்பாளரிடம் காட்டி விளம்பரம் தேடிக் கொள்ளலாம். அதன் விளைவு?
“அடுத்துவரும் படம் ஒன்று ஸ்கைலாப் போல பொசுக்கென்று விழுந்தால் போதும். மின்னல் வேகத்தில் நம்மை புக் செய்த தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் போனால் போகிறது என்று கருதிப் படம் தயாரிப்பதைக் கைவிட்டு விடுவார்கள். அதன் பிறகு அந்தப் படத்தின் நிலையையும் தயாரிப்பாளரின் நிலையையும் அறிய விரும்பினால் கிணற்றில் போட்ட கல்லைப் போல எந்தவிதமான தகவலும் கொஞ்சம்கூட இல்லாமல் இருப்பதை அறிந்து விவரம் புரியாமல் தலையைச் சொறிந்துகொள்ள, நாளாவட்டத்தில் பாயைப் பிய்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு என்றைக்கும் நான் வர விரும்பவில்லை.
“பெரிய ஓவியனாக வர வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்பட்டேன். அதற்காக காந்தி, நேரு, கலைவாணர் போன்றவர்களின் படங்களை வரைந்தேன். ஒரு நாள் அவற்றை எடுத்துக்கொண்டு ஓவியத்தில் ஓங்குபுகழ் பெற்றவரை அணுகி, ஓவியங்களைக் காட்டி, “என் கலைத் திறமை எப்படி இருக்கிறது? என் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று கேள்வி கேட்டுப் பதிலுக்காகக் கைகட்டிக் காத்து நின்றேன்.
“அவர் என் ஓவியங்களை ஒரு முறைக்குப் பல முறை உற்றுப் பார்த்துவிட்டு, “இனி ஓவியம் வரையாதே” என்று கூறினார். அதைக் கேட்டதும் என் உடம்பு வெலவெலத்து, வேர்த்து, விறுவிறுத்து, நாக்கு வறண்டு, தொண்டை காய்ந்து, தட்டாமலை சுற்றியவுடன் ஏற்படுமே உணர்வு, அந்த நிலையை அடைந்தேன்.
அடுத்த நிமிடம் என் வலது கையைப் பிடித்துக் கைகொடுத்து, “பேஷ், பேஷ் ரொம்பப் பிரமாதம், இந்த ஓவியங்களை எல்லாம் அப்படியே வைத்திரு. இப்போது உனக்கு அழகு, நல்ல உடற்கட்டு, வயது எல்லாம் இருக்கின்றன. வயது ஆகும் வரையில் நடி. வயதானால் மார்க்கெட் போய்விடும். நடிக்க முடியாது. ஆனால், படம் வரைவதற்கு வாலிப வயது தேவையில்லை. ஓய்வுக் காலங்களில் சும்மா சிவனே என்றில்லாமல் அப்போது இந்த நல்ல ஓவியங்களை எல்லாம் பணமாக்கிக் கொள்ளலாம்” என்று கூறி, என்ன ஆசிர்வாதம் செய்து அனுப்பிவைத்தார். அவர் அன்று கூறியதை வெறும் பேச்சாகக் கருதாமல் நல்ல அறிவுரையாக ஏற்றேன். அதன் விளைவு? இன்று மிகவும் வசதியாக, சந்தோஷமாக – நிம்மதியாக இருக்கிறேன்.
இதையும் படிக்க: கமல் 234 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது!
“அன்று நான் சந்தித்த ஓவியர் வேறு யாருமல்ல, திரு. கோபுலு அவர்கள்தான்!
“ஆர்ட்ஸ் ஸ்கூலில் படிக்கும்பொழுது வாழ்வில் என்றைக்காவது ஒரு நாள் எப்படியாவது அவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அவருடைய சந்திப்பும் அறிவுரையும் பாராட்டும் என் நெஞ்சை இன்னும் நெகிழ வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன”.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனில் தொடங்கி, அஜித், விஜய், விக்ரம், சூர்யா உள்பட மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சிவகுமாரின் தலைசிறந்த படங்களென ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்துபைரவி ஆகியவற்றைச் சொல்லலாம்.
மகன்கள் சூர்யா, கார்த்தி எல்லாரும் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்க இன்னும் தன்னைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டிருக்கும் சிவகுமார். கம்பராமாயணம், திருக்குறள் எனப் புதுமையான சொற்பொழிவுகளையும் நிகழ்த்துகிறார்.
[அக். 27 - நடிகர் சிவகுமாரின் பிறந்த நாள்]
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/QvfgyF6