புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு நேரெதிரே 20 கோடியில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கு, தெற்கு ரயில்வே ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறது.
புதிதாக் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக, பேருந்து நிலையத்துக்கு அருகே ரயில் நிலையம் அமைக்கப்பட வேண்டும், இல்லையென்றால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பேருந்து முனையத்துக்கு எதிரே ரயில் நிலையம் அமையவிருக்கும் இடத்தை தெற்கு ரயில்வே அதிகாரிகள் கடந்த வார இறுதியில் நேரில் வந்து ஆய்வு செய்திருந்தனர்.
மேலும், இங்கு ரயில் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருப்பதாகவும், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் நடைமேடைகள் அமைப்பதற்காக இந்த ஒப்பந்தப்புள்ளியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
300 மீட்டர்கள் நீளமுள்ள மூன்று நடைமேடைகள் அமைக்கப்படவிருக்கின்றன. இந்த கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் நின்று செல்லும். பேருந்து முனையத்திலிருந்து, இந்த ரயில் நிலையத்துக்கு நடைமேம்பாலம் மூலம் இணைப்பு வழங்கப்படும் என்றும், இதனை சிஎம்டிஏ கட்டமைக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ரயில் தண்டவாளங்கள் மற்றும் ஜிஎஸ்டி சாலைகளைத் தாண்டி இந்த நடைமேம்பாலம் அமைக்கப்படவிருப்பதால் அதற்கு, தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரயில்வேயிடம் அனுமதி கோரி பெற்ற பிறகே கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருபக்கம் ரயில் நிலையம் கட்டுமானப் பணிகளும், மறுபக்கம் நடைமேடை கட்டுமானப் பணிகளும் ஒன்று சேர தொடங்கி 2024 இறுதி அல்லது 2025ஆம் ஆண்டு மத்தியில் நிறைவடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
450 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்டதாக இந்த நடைமேம்பாலம் அமையவிருக்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 5000 பேர் வரை இந்த நடைமேம்பாலத்தில் இருக்கும் வகையில் கட்டமைக்கப்படும். இதற்கிடையே, இந்த நடைமேம்பாலம் நேராக ரயில் நிலையத்திலிருந்து பேருந்து முனையத்துக்கு என்றில்லாமல், நடுவில் ஜிஎஸ்டி சாலையை கடப்பவர்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்படவிருக்கிறது.
முதலில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டதும் பேருந்து முனையத்தைத் திறப்பது சிறந்தது என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். பருவமழை காலத்திலும் நடைமேம்பாலம் திறக்கப்பட்டுவிட்டால், பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் எளிதாக வெளியேற முடியும் என்றும் கூறப்படுகிறது.
என்னதான் ரயில் நிலையம் அமைக்கப்பட்டாலும், இந்த வழித்தடத்தில் அதிகமான ரயில்கள் இயக்கப்பட வேண்டியதும் அவசியமாகிறது என்று மக்கள் கூறுகிறார்கள்.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/b2LVCpT