https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2023/10/18/22.JPGமக்கள் எதிர்க்கும் பரந்தூர் விமான நிலையம் அவசியம்தானா? - டிஜிட்டல் எக்ஸ்க்ளூசிவ்!


காஞ்சிபுரம்: தமிழகத்தின் வளர்ச்சிக்கு மாநிலத்தின் தலைநகரில் மீனம்பாக்கத்தை அடுத்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அவசரம் காட்டுகிறது அரசு. பல குடும்பங்கள், நீர் ஆதாரங்கள் பாதிப்பதால் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

தமிழகத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டாவதாக மற்றொரு விமான நிலையம் உருவாக்குவதற்கான முயற்சிகள் குறித்து பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டது.

புதிய விமான நிலையம் அமைக்க சென்னைக்கு அருகேயுள்ள திருப்போரூர், படாளம், பன்னூர், தாம்பரம் உள்பட மொத்தம் 11 இடங்கள் ஆய்வு செய்ப்பட்டதில் இறுதியாக பரந்தூரில் அமைப்பதே தொழில்நுட்ப ரீதியாக சரியானது என்ற முடிவுக்கு அரசு வந்தது. புதிய விமான நிலையத்தை அமைக்க சுமார் 4,500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. பரந்தூர், வளத்தூர், மடப்புரம், நெல்வாய், தண்டலம், ஏகனாபுரம், அக்கம்மாபுரம் உட்பட மொத்தம் 13 கிராமங்களிலிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும்.

பட்டா நிலங்கள் 2,500 ஏக்கரும், அரசு புறம்போக்கு நிலம் 2,200 ஏக்கர் உள்பட மொத்தம் 4,700 ஏக்கர் புதிய விமான நிலையம் அமைக்க இடம் தேவைப்படுகிறது. ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டீல் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தேவையான நிலங்களை கையகப்படுத்துவதற்கும் விமான நிலைய எல்லையை இறுதி செய்வதற்கும் நிர்வாக அனுமதியை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஓரிரு வாரங்களில் அனுமதியளிக்கவும் உள்ளது.

அரசு கூறும் காரணங்கள்

சென்னை விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அனுப்ப வேண்டிய சரக்குகள் பெங்களூருவுக்கும், ஹைதராபாத் விமான நிலையங்களுக்கும் மாறிச் சென்று விடுகின்றன. இதனால் இவ்விரு விமான நிலையங்களின் வருவாயும் அம்மாநிலங்களின் தொழில் வளர்ச்சியும் அதிகரித்திருக்கிறது.

சென்னை விமான நிலையம் சரக்குப் போக்குவரத்தில் பின்தங்கி இருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். பரந்தூரைச் சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் இருப்பதால் இவற்றுக்கான ஏற்றுமதிக்கு புதிய விமான நிலையம் வருவது பேருதவியாக அமைந்து விடும். 


விமான பயணிகள் போக்குவரத்திலும் இந்திய அளவில் 3-வது இடத்திலிருந்த சென்னை விமான நிலையம் இப்போது 6-வது இடத்துக்குப் போய்விட்டது. பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைந்தால் அதிகமான பயணிகள் பயணிக்கும் பெரிய ரக பட்ஜெட் விமானங்களையும் தரையிறக்க முடியும். சர்வதேச அளவில் பிற நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி விடும். பெங்களூரு அல்லது புதுதில்லி விமான நிலையங்களுக்கு வந்து பின்னர் சென்னைக்கு வந்து சேர வேண்டிய சூழலையும் தவிர்க்க முடியும். பயணிகளுக்கான விமானப் பயண நேரமும் வெகுவாக குறைந்து விடும். வெளிநாடுகளுக்கு சென்று விட்டு திரும்புகிற எந்த எந்த பயணியைக் கேட்டாலும் விமான நிலைய கட்டமைப்புகளில் தமிழ்நாடு எந்த அளவுக்கு பின்தங்கி இருக்கிறது என்பதையும் தெளிவாகவே சொல்லிவிடுவார்கள். 

இதையும் படிக்க | பரந்தூர் விமான நிலையம் தேவையில்லை - ஏன்?

விமானப் பயணிகள் போக்குவரத்திலும், சரக்குப் போக்குவரத்திலும் சென்னை பின்தங்கியே இருப்பதால் தமிழகத்துக்கு முதலீடு செய்ய வரும் பல பன்னாட்டு நிறுவனங்கள் தயங்குகின்றன. அதேவேளையில் நமக்கு அருகில் இருக்கும் மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா ஆகியன அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதிலும், புதிய தொழிற்சாலைகளை அமைப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்காக ரூ.100 செலவு செய்தால் அதன் மூலம் மாநிலத்துக்கு ரூ.325 வரை வருமானமாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தொழில் துறையின் வளர்ச்சிக்கும், புதிய வேலைவாய்ப்புகள் பெருகி தமிழகம் மிகச்சிறந்த மாநிலமாக மாறவும் பரந்தூரில் அமையவுள்ள 2-வது விமான நிலையம் காலத்தின் கட்டாயமாகிறது.

குடியிருப்புகள், நீர்நிலைகள் பாதிக்காதவாறு புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கென்று அரசு ஒரு குழுவையும் நியமித்துள்ளது. புதிய விமான நிலையம் அமையவுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போருக்கு வருவாய்த் துறையினரின் கணக்கீட்டின்படி 3.5 மடங்கு அதிக தொகை கொடுக்கவும் அரசு முன்வந்துள்ளது. கையகப்படுத்தப்பட்ட குடியிருப்புவாசிகளுக்கு தனியாக இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு இடமும், வீடு கட்ட பணமும் தரப்போவதாகவும், விவசாயிகளுக்கும், வீட்டு உரிமையாளர்களும் அரசு உதவியாக இருக்கும் என்றும் அரசின் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தகுதியின் அடிப்படையில் படித்தவர்களுக்கு அரசு சார்பில் வேலையும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள்

விவசாயமும், அது சார்ந்த தொழில்களையும் மட்டுமே செய்து வரும் இப்பகுதி மக்கள் பிற இடங்களுக்கு புலம்பெயர வேண்டிய நிலை வந்தால் வாழ்வாதாரமும், நிரந்தர வருமானமும் கேள்விக்குறியாகி விடும் என்கிறார்கள். பல தலைமுறைகளாக பூர்விகச் சொத்துக்களை அனுபவித்து வரும் இம்மக்கள் அவற்றை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். பூர்வீக சொத்துக்களின் மதிப்பிற்கும், மரியாதைக்கும் அரசு தரும் இழப்பீடு ஈடாகி விடாது. குடியிருப்புவாசிகளை அப்புறப்படுத்துவது என்பது அம்மக்களை துரத்துவதற்கு ஒப்பாகி விடும் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள். 


விமான நிலையம் அமையவுள்ள 13 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,500 ஏக்கர் பட்டா நிலங்கள், குளம், குட்டைகள், பள்ளிக்கூடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சுமார் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இவை அத்தனையுமே அழிந்து விடும் அபாயமும் உள்ளது என்றும் அம்மக்கள் அச்சப்படுவதிலும் தவறில்லை. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்கிற அரசின் அறிவிப்பால் அப்பகுதி முழுவதும் இப்போதே நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வளர்ச்சிக்கு 2-வது விமான நிலையம் அமைவது அவசியம் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்காமல் வேறு இடத்தில் அமைத்துக்கொள்ளுங்கள் என்று தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் ஏகனாபுரம் கிராமத்தில் நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவிக்க எத்தனை வகையான போராட்டங்கள் இருக்கிறதோ அவையனைத்தையும் தொடர்ந்து செய்து போராட்டங்களை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். முடிவே இல்லாத தொடர் கதையாகி இருக்கிறது. 

வளர்ச்சித் திட்டங்கள் எப்போதெல்லாம் தொடங்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளைக் கண்டு மக்கள் அச்சமடைகிறார்கள். அத்திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பதற்றத்துக்கும் ஆளாகி விடுகிறார்கள். 

வளர்ச்சிக்கும், சூழலியலுக்கும் இடையிலான உறவு ஒன்றுக்கொன்று எதிரானதாகவே இருந்துவிடாமல் இரண்டும் ஒன்றாக, ஒற்றுமையாக செல்வதே அதீத வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் வெற்றி பெறப்போவது அரசா அல்லது அப்பகுதி மக்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

விமான நிலையங்களின் விரிவாக்கம் தேவை!

விமானப் போக்குவரத்தைப் பொருத்தவரை பெங்களூருவையும் ஹைதராபாத்தையும் ஒப்பிடுவது தமிழ்நாட்டுக்கு கொஞ்சமும் பொருந்தத்தக்கதல்ல. இவ்விரு நகர்களும் நிலத்தால் சூழப்பட்டிருப்பவை, கடல் (நீர்வழித்) தொடர்பு இல்லாதவை. தமிழ்நாட்டில் துறைமுகங்கள் மூலமாக கடல்வழி போக்குவரத்து சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. 

விமானப் பயணிகளைப் பொருத்தவரை பெருமுனையத்தின் மூலம் கிடைக்கக் கூடியவை, பரந்த அளவில் விமானத் தடங்களின் இணைப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கம், குறைந்த கட்டணம் ஆகியவையே. ஆனால், இவை எல்லாவற்றையுமே  பெங்களூருவிலுள்ள கெம்பேகௌட பன்னாட்டு விமான நிலையம் நிறைவு செய்கிறது.

பெங்களூருவிலிருந்து வெறும் 30 நிமிஷங்களுக்கும் குறைவான பயணத் தொலைவில்தான் சென்னை இருக்கிறது. பெங்களூருவிலிருந்து தமிழகத்திலுள்ள இரண்டாம்நிலையிலான கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி நகர்களின் விமான நிலையங்களை எளிதில் இணைக்க இயலும், எல்லா இடங்களுக்கும் 60 நிமிஷங்களுக்குள் சென்றுவிட முடியும். 

எனவே, புதிதாக விமான நிலையங்களை அமைக்காமல் ஏற்கெனவே இருக்கும் விமான நிலையங்களை விரிவுபடுத்தும், இணைக்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வேலைகளைத் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. 



from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/rv8fNtl

Post a Comment

Previous Post Next Post