மருத்துவக் கல்லூரி சேர்க்கை மற்றும் தொடங்குவது தொடர்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகள் காரணமாகத் தென் மாநிலங்களில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாத மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட மருத்துவக் கல்வி தொடர்பான விதிகளை வகுக்க 'இந்திய மருத்துவ கவுன்சில்' செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2020 செப்டம்பர் மாதம் இது 'தேசிய மருத்துவ ஆணையம்' (என்எம்சி - National Medical Commission) என மாற்றப்பட்டது.
இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி மருத்துவ சேர்க்கை மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வழிகாட்டுதல்கள்தான் தென்னிந்திய மாநிலங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், இதன் காரணமாகத் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ ஏற்கெனவே உள்ள கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை அதிகரிக்கவோ முடியாது. இந்த விதிகள் வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகின்றன.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 10 லட்சம் மக்களுக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற விகிதத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று புதிய விதிமுறையை என்.எம்.சி. கூறியுள்ளது. இந்த விகிதத்தை தென் மாநிலங்கள் கடந்துவிட்டதால் அங்கு புதிய கல்லூரிகளை அமைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் புதிய இளநிலை மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான விண்ணப்பங்கள் 50, 100, l50 என்ற விகிதங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதையும் படிக்க | ஒரே நாடு, ஒரே தேர்தல்: மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை?
நாட்டில் மொத்தம் 704 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, 2021 ஆம் ஆண்டின்படி, தமிழ்நாட்டில் 7.64 கோடி மக்கள்தொகைக்கு 71 மருத்துவக் கல்லூரிகளில் 11,600 இடங்கள் உள்ளன. நாட்டிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ இடங்களைக் கொண்டு தமிழ்நாடு முதல் மாநிலமாக இருக்கிறது.
அடுத்து 6.68 கோடி மக்கள்தொகையுடன் கர்நாடகம் 67 மருத்துவக் கல்லூரிகளில் 11,695 இடங்களைக் கொண்டுள்ளது.
ஆந்திரத்தில் 6,435 இடங்கள்(5.27 கோடி மக்கள்தொகை), கேரளத்தில் 4,655 இடங்கள்(3.54 கோடி மக்கள்தொகை), தெலங்கானாவில் 8,540 இடங்கள் (3.77 கோடி மக்கள்தொகை) உள்ளன.
இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி தமிழ்நாட்டில் 7,600, கர்நாடகத்தில் 6,700, ஆந்திரத்தில் 5,300, கேரளத்தில் 3,500, தெலங்கானாவில் 3,700 என்ற அளவில்தான் மருத்துவ இடங்கள் இருக்க வேண்டும்.
மருத்துவர்களின் விகிதம் 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் (1:1,000) இருக்க வேண்டும் என்ற நிலையில் தென் மாநிலங்களில் 854 பேருக்கு ஒரு மருத்துவர் (1:854) இருக்கிறார்.
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் கர்நாடகத்தில் 22 மாவட்டங்களில் அரசுக் கல்லூரிகள் உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி வேண்டும் என தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசு முனைப்புக் காட்டி வரும் நிலையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த விதிகள் மிகப் பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது. மேலும் மருத்துவக் கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த மாநில உரிமைகளை மீறுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த வழிகாட்டுதல்களை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும் இதுகுறித்து மத்திய அரசிடம் முறையிட உள்ளதாகவும் மாநில கல்வித் துறை அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
'இது பிற்போக்குத்தனமான உத்தரவு, மாநில நலன், மாணவர்களின் நலன் குறித்து அக்கறை இல்லை. இது தென் மாநிலங்களுக்கு எதிரான தெளிவான பாகுபாட்டைக் காட்டுகிறது. மருத்துவம் படிக்கும் மாணவர்களின் ஆர்வத்தை எப்படி கட்டுப்படுத்த முடியும்? வட மாநிலங்கள் செயல்படாததற்குத் தென் மாநிலங்களை மத்திய அரசு தண்டிக்கிறது' என்று கூறியுள்ளார்.
இதுபோல காசர்கோடு, வயநாடு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுவர கேரள அரசும், 2,737 கூடுதல் மருத்துவ இடங்களை ஏற்படுத்த புதிதாக 17 கல்லூரிகளை நிறுவ ஆந்திர அரசும் முயற்சித்து வருகின்றன.
ஆனால், நாட்டில் ஆண்டுக்கு 60 புதிய கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் வருவதாகவும் அவற்றில் 10 கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் தென் மாநிலங்களில் இருந்து வருவதாகவும் இது குறிப்பிட்ட மாநிலங்களில் வேலையின்மையை அதிகரிக்கும் என்று தேசிய மருத்துவ ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, தென் மாநிலங்களில் பெரும்பாலும் மாநில கட்சிகளே ஆட்சியில் இருப்பதால் மத்திய பாஜக அரசுடன் ஒரு இணக்கமான சூழல் இல்லாத நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகள் தென் மாநிலங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/UXbZI8W