தமிழ்நாட்டில் நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது மாணவி ஒருவர் பலியானதையடுத்து, ஷவர்மா விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. ஷவர்மாவால் உயிரிழப்பு என்பது புதிதல்ல, கடந்த ஆண்டு கேரளத்தில் இதேபோன்று ஒரு மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழ்நாட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜோர்தானில் ஷவர்மா சாப்பிட்ட 800 பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஷவர்மா - அறிமுகம் ஷவர்மா என்பது மத்திய கிழக்கு நாடுகளின் உணவு. 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் துருக்கியில் அறிமுகமானது. சிக்கன் ஷவர்மா, பீஃப் (மாட்டுக்கறி) ஷவர்மா, போர்க் (பன்றி) ஷவர்மா, வெஜிடபிள் ஷவர்மா என வகைகள் உள்ளன. அதிலும் மெக்சிகன் ஷவர்மா, ஸ்வீட் சில்லி ஷவர்மா, லாங் ஷவர்மா என சுவைக்கு ஏற்ப வகைகளும் உள்ளன. இந்தியாவில் 1997 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் அறிமுகமானது. சௌதி அரேபியாவில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்த ஒருவர் இந்தியாவில் தான் தொடங்கிய உணவகத்தில் இதனை அறிமுகப்படுத்தினார். தற்போது உலகம் முழுவதும் ஒரு பொதுவான அசைவ உணவாக இருந்து வருகிறது. எப்படி தயார் செய்கிறார்கள்? கோழிக்கறி அல்லது ஏதேனும் ஒரு வேகவைத்த இறைச்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, நன்றாக சுடப்பட்ட ரொட்டியில் வைத்து சுருளாக்கித் தயாரிக்கப்படுகிறது. இத்துடன் மயோனைஸ், சாஸ், முட்டைகோஸ் என கூடுதல் பொருள்களும் சுவைக்காகச் சேர்க்கப்படுகின்றன. ஷிகெல்லா பாக்டீரியா கேரளத்தில் 2022ல் ஷவர்மாவால் உயிரிழப்பு ஏற்பட்டபோது, காரணமான ஷவர்மா மாதிரிகளில் ஷிகெல்லா(Shigella), சால்மோனெல்லா(salmonella) பாக்டீரியாக்கள் இருந்துள்ளதை கேரள சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவே இறப்புக்குக் காரணம் என்றும் தெரிவித்தது. இதையும் படிக்க | வெங்காயத்தை சமையலுக்கு மட்டுமல்ல, அழகுக்கும் பயன்படுத்தலாம்! எப்படி? ஷவர்மாவில் ஷிகெல்லா ஷவர்மா தயாரிக்கப் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு பொருளில் உள்ள பாக்டீரியா காரணமாக இருக்கலாம். நன்றாக வேக வைக்கப்படாத அல்லது முந்தைய நாள் இறைச்சி, விரைவில் கெட்டுப்போகக் கூடிய மயோனைஸ், அழுகிய காய்கறிகள், காலங்கடந்த சாஸ்கள் ஆகியவற்றின் மூலமாகவும் இறைச்சியை சரியாக வேக வைக்காததாலும் நீண்ட நேரம் மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதாலும் ஷவர்மா தயாரிக்கும் இடங்களில் உள்ள சுகாதாரக் குறைவு சுத்தமற்ற நபர்கள், ஷிகெல்லா தொற்றியவர்கள் காரணமாக இருக்கலாம். பாதிப்பு, அறிகுறிகள் வயிற்றுப் போக்கிற்கு ஷிகெல்லா பாக்டீரியாவே முக்கிய காரணமாக இருக்கிறது. இது வயிற்றுக்குள் செல்லும்போது சிறுகுடலில் தொற்றை ஏற்படுத்தி பின்னர் பல்கிப் பெருகுகிறது. இது பெருங்குடலுக்கும் பரவுகிறது. இதனால் வயிற்றுப் போக்குடன் குடல் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல், வாந்தி, குமட்டல், வயிற்று வலி, வியர்வை அதிகமாக வெளியேறுதல், தலைவலி, செரிமானப் பிரச்னைகள் ஏற்படும். இதையும் படிக்க | டெங்கு பரவல்: என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? அதிகபட்சமாக நரம்புகளில் பிரச்னை, சிறுநீரக செயலிழப்புகூட ஏற்படலாம். கர்ப்பிணிகள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது. மனிதக் கழிவு, தண்ணீர் போன்றவற்றில் ஷிகெல்லா பாக்டீரியாக்கள் இருக்கின்றன, பரவுகின்றன. ஷிகெல்லா பாக்டீரியா உலகம் முழுவதுமே அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ஆண்டுக்கு 18.8 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர், 10 லட்சம் பேர் இறக்கின்றனர் எனக் கூறுகின்றன தரவுகள். ஷிகெல்லா பரவுமா? அசுத்தமான உணவு அல்லது தண்ணீர் மற்றும் கழிப்பிடங்கள் மூலமாக இந்த பாக்டீரியா பரவுகிறது. பாக்டீரியா உள்ள பொருள்களைத் தொடும்போது, பாக்டீரியா உள்ள உணவுகளைச் சாப்பிடும்போதும், ஷிகெல்லாவால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரின் மூலமாகவும் பரவலாம். தடுப்பது எப்படி? உணவுகளை அதிக வெப்பநிலையில் முழுவதுமாக வேகவைத்து சாப்பிட வேண்டும். உதாரணமாக சிக்கன் குறைந்தது 75 டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலையில் வேக வைக்க வேண்டும். உணவு, தண்ணீர், சமையல் பொருள்கள் தரமானதாக சுத்தமானதாக இருக்க வேண்டும். வயிற்றுப் போக்கு உள்ளவர்களுடன் தொடர்பில் இருத்தல் கூடாது. அவர்கள் சமைக்கக் கூடாது. இதையும் படிக்க | நம்பிக்கையும் உண்மையும்: புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமா? பரவக்கூடியதா?
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/ik20TmK
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/ik20TmK