நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் திட்டம் எப்போது உதித்ததோ, அப்போதே, அந்த திட்டத்துடனான தமிழர்களின் பங்கும் தொடங்கிவிட்டிருந்தது. அதாவது, சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 2 விண்கலம் திட்டங்களின் தலைவர்களாக இருந்த மயில்சாமி அண்ணாதுரை மற்றும் எம். வனிதா இருவருமே தமிழர்கள். வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் - 3 விண்கலம் திட்டத்தின் தலைவராக இருப்பவர் பி. வீரமுத்துவேல். இவர் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து சரியாக பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து கொண்டு எல்விஎம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் விண்கலத்தைச் சுமந்துகொண்டுச் சென்ற எல்பிஎம் 3- எம்4 ராக்கெட்டின் இரண்டு அடுக்குகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பிரிந்த நிலையில், தற்போது மூன்றாவது அடுக்கும் வெற்றிகரமாக பிரிந்துவிட்டது. பிறகு வெற்றிகரமாகப் பயணித்து பூமியிலிருந்து 179 கி.மீ. தொலைவில், நீள் வட்டப்பாதையில் சந்திரயான் - 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் தலைமையின் கீழ் இயங்கும் சந்திரயான் - 3 விண்கலம் திட்டத்தின் இயக்குநராக இருப்பவர் 46 வயதாகும் வீரமுத்துவேல். பிஎச்.டி. பட்டம் பெற்ற வீரமுத்துவேல், சென்னை ஐஐடியில் கல்வி பயின்றவர். இஸ்ரோ தலைவராக இருந்த போது செயல்படுத்தப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் திட்டத்தின் இயக்குநராக இருந்த வனிதாவுக்குப் பின், அவரது பொறுப்பை வீரமுத்துவேல் ஏற்றுள்ளார். இஸ்ரோ வரலாற்றிலேயே, திட்ட இயக்குநராக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றிருந்தவர் நமது தமிழகத்தைச் சேர்ந்த வனிதா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/XPc8axC

from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/XPc8axC