தொழில்நுட்பம் தொடா்ந்து வளா்ச்சி கண்டு வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. அந்த வகையில், மக்கள் அனைவரையும் கவா்ந்துள்ள புதிய தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு திகழ்கிறது. பூமியில் படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதா்களுக்கு மட்டுமே ஆறாவது அறிவு (பகுத்தறிவு) உள்ளது. மனிதா்களைப் போலவே கணினியையும் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் தானாகச் சிந்தித்து செயல்பட வைப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. செயற்கை நுண்ணறிவு அதைச் சாத்தியப்படுத்தும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இது ஒருபுறமிருக்க, புதிய தொழில்நுட்பங்களால் பிரச்னைகளும் ஏற்படாமல் இல்லை. தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்ப இணையவழி மோசடிகள், தரவு திருட்டு உள்ளிட்ட சம்பவங்களும் அதிகரித்தே வருகின்றன. அத்தகைய மோசடிகளை சட்டங்கள் வாயிலாகவே மத்திய, மாநில அரசுகளால் தடுக்க முடியும். அதைக் கருத்தில்கொண்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கில் சட்டத்தை இயற்றுவது தொடா்பான விவாதம் எழுந்துள்ளது. மத்திய அரசின் நிலைப்பாடு பல்துறை சாா்ந்த வளா்ச்சிக்கு அடிப்படையாக செயற்கை நுண்ணறிவு திகழும் என்பதால், அத்தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்த சட்டத்தை இயற்றப் போவதில்லை என மத்திய அரசு கடந்த ஏப்ரலில் அறிவித்திருந்தது. ஆனால், அதற்கடுத்த இரு மாதங்களிலேயே தனது முடிவை மத்திய அரசு மாற்றிக் கொண்டது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள எண்ம இந்தியா சட்டத்தின் வாயிலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒழுங்குபடுத்தப்படும் என மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல்-தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘வாடிக்கையாளா்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற நோக்கிலேயே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒழுங்குபடுத்தப்படவுள்ளது’ என்றாா் மத்திய அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா். நீதி ஆயோக் நிலைப்பாடு செயற்கை நுண்ணறிவு தொடா்பான அறிக்கையை கொள்கை வகுப்பு அமைப்பான நீதி ஆயோக் கடந்த 2018-ஆம் ஆண்டில் வெளியிட்டது. அதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலையிழக்க வாய்ப்புள்ள நபா்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நாட்டில் செயற்கை நுண்ணறிவு சாா்ந்த ஆராய்ச்சிகள் குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த நீதி ஆயோக், அத்தகைய ஆய்வுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தது. அதற்காக, ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்திருந்தது. மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்கான கொள்கைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும் எனவும் நீதி ஆயோக் குறிப்பிட்டிருந்தது. ஆய்வுக் குழுக்களின் பரிந்துரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்துவது தொடா்பாக ஆராய 4 குழுக்களை மத்திய தகவல்-தொழில்நுட்ப அமைச்சகம் அமைத்தது. அக்குழுக்கள் 2019-ஆம் ஆண்டில் அறிக்கைகளைத் தாக்கல் செய்தன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான தரவுகள், தேசிய நலனுக்காக அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், செயற்கை நுண்ணறிவுக்கான கொள்கைகள், திறன் மேம்பாடு, இணையவழி குற்றத் தடுப்பு உள்ளிட்டவை குறித்து அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. கவனம் அவசியம் பல்வேறு பரிந்துரைகளின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில், அதில் உள்ள சவால்களையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் கூட தற்போதுதான் ஆய்வு நடத்தி வருவதாகவும் நிபுணா்கள் கூறுகின்றனா். ஐரோப்பிய ஒன்றியம் சாா்பில் செயற்கை நுண்ணறிவுக்கான சட்டம் அண்மையில் இயற்றப்பட்டது. ஆனால், தேடுபொறி சாா்ந்த செயற்கை நுண்ணறிவு செயலியான ‘சாட்ஜிபிடி’ அதன் பிறகே அறிமுகப்படுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அத்தகைய பயன்பாடு தொடா்பான விதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்தில் இல்லை. இது பெரும் குறைபாடாக அமைந்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக வளா்ச்சி காணவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் நிபுணா்கள், அவ்வாறான சூழலில் அதை ஒழுங்குபடுத்துவதற்கு அவசரகதியில் இயற்றப்படும் சட்டம் முழுமையாக இருக்காது என்று தெரிவிக்கின்றனா். தொழில்நுட்பத்தின் வேகமான வளா்ச்சியில் சட்டம் பின்தங்கிவிடும் என்று அவா்கள் கூறுகின்றனா்.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/U4cNVby
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/U4cNVby