ஒவ்வொரு நாளும் அரிசி விலை உயர்ந்துகொண்டிருக்கிறது. ஒருபக்கம் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி தடை செய்யப்படுகிறது. இன்னொரு பக்கம் மத்திய தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கே அரிசி விற்பனை இல்லை என மத்திய அரசு அறிவித்துவிட்டது. ஆனால், மறுபக்கம் நேர்மாறாக இவற்றைப் பற்றியெல்லாம் எவ்விதக் கவலையுமின்றி செலவைவிட மிகக் குறைந்த விலையில் எத்தனால் தயாரிப்புக்காக அரிசியை விற்றுக்கொண்டும் இருக்கிறது மத்திய அரசு! வெளிநாடுகளுக்கு பாசுமதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்துவிட்டது. அரிசி ஏற்றுமதியில் இவற்றின் அளவு நான்கில் ஒரு பங்கு. மற்ற வகை அரிசிகளின் ஏற்றுமதிக் கொள்கையில் இன்னமும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. உள்ளூர் சந்தையில் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஏற்றுமதித் தடை விதிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அரிசிக்காகக் கடைகளில் வரிசைகளில் காத்திருக்கிறார்கள். இதையும் படிக்க | நெய்வேலியில் கலவரமாக மாறிய போராட்டம்: கல்வீச்சு, தடியடி; காவல் ஆய்வாளர் காயம்! இதேபோல, மத்திய அரசின் தொகுப்பில் - இந்திய உணவு கார்ப்பரேஷன் வசமுள்ள அரிசியை மாநிலங்களுக்கு விற்கவும் மத்திய அரசு மறுத்துவிட்டிருக்கிறது. அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் விநியோகிக்க அரிசி வேண்டும் என்ற கர்நாடக காங்கிரஸ் அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. வேண்டுமானால் வெளிச்சந்தையில் வாங்கி, தாராளமாக இந்தத் திட்டத்துக்காக மக்களுக்குத் தரட்டும் என்று கடந்த வாரம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். வெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் மத்திய தொகுப்பிலிருந்து மாநில அரசுகளுக்கு அரிசி, கோதுமை விற்பதையும் மத்திய அரசு நிறுத்திவிட்டது. வெளிச்சந்தையில் விலை அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காகவும் தொடர்ந்து மக்களுக்கு வாங்கக் கூடிய விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காகவுமே பல்வேறு மாநிலங்களுக்கும் அரிசி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. '140 கோடி மக்களுக்கு பணி செய்வதற்காக' மத்திய தொகுப்பிலிருந்து அரிசியை விடுவிப்பதில்லை என்று அரசு செயலர்களின் குழு முடிவு செய்துள்ளதாகவும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் அரிசிக்கான கோரிக்கைகள் வந்திருக்கின்றன. வேறுபல மாநிலங்களும் அரிசி வேண்டுமெனக் கேட்கின்றன. ஆனால், எல்லாருக்குமே அரிசி வழங்க மறுத்துவிட்டோம் என்றும் அமைச்சர் கோயல் தெரிவித்தார். இந்த நிலையில், மாற்று எரிபொருளான எத்தனால் தயாரிப்புக்காக மத்திய தொகுப்பிலிருந்து அதிகளவில் அரிசியைத் திருப்பிவிடும் மத்திய அரசின் நடவடிக்கைகள் வெளிவந்துள்ளன. 2023 ஜூன் மாதத்தில் மட்டும் எத்தனால் தயாரிப்புக்காக 2.77 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மே மாதத்தில் 2.95 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி விடுவிக்கப்பட்டிருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் இதே ஜூன் மாதத்தில் எத்தனால் தயாரிப்புக்காக வழங்கப்பட்ட அளவுடன் ஒப்பிட, இது 216 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 87 ஆயிரம் டன்களே வழங்கப்பட்டன. எத்தனால் தயாரிப்புக்காக மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலகட்டத்திலேயே 24 லட்சம் டன்கள் அரிசியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. கூடுதலாகக் கையிருப்பிலிருக்கும் அரிசியை எத்தனால் தயாரிக்க வழங்குவதை 2020-21-ல்தான் மத்திய அரசு தொடங்கியது. இதையும் படிக்க | மணிப்பூரில் நடப்பது என்ன? இனி வரும் மாதங்களில் எத்தனால் தயாரிப்புக்காக வழங்கப்படும் அரிசியின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், டிச. 1-ல் தொடங்கி நவ. 30-ல் முடியும் எத்தனால் ஆண்டில் 32 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை எத்தனால் தயாரிப்புக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரையிலும் 13 லட்சம் மெட்ரிக் டன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மீதி 19 லட்சம் டன்களும் நவம்பர் இறுதிக்குள் வழங்கப்பட வேண்டும். மேலும், நெருக்கடியான இந்த நேரத்தில் கூடுதலான விலைக்குக்கூட மாநிலங்களுக்கு அரிசியை விற்க மறுக்கும் மத்திய அரசு, எத்தனால் தயாரிப்புக்காக மட்டும் மிகக் குறைந்த விலைக்குதான் தந்துகொண்டிருக்கிறது. 2020 மே மாதத்தில் எத்தனால் வடிப்பாலைகளுக்கு அரிசி ஒரு குவிண்டால் விலை ரூ. 2,250-க்கு விற்க முடிவு செய்தது. ஆனால், அதே ஆண்டில் டிசம்பர் மாதத்தில் இந்த விலையை குவிண்டாலுக்கு ரூ. 2000 ஆகக் குறைத்துவிட்டது. இன்னமும், ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக, இதே மலிவு விலைக்குதான் எத்தனால் வடிப்பாலைகளுக்கு மத்திய அரசு அரிசியை விற்றுக்கொண்டிருக்கிறது. அரிசியைக் கொள்முதல் செய்யவும் இருப்பு வைக்கவும் இந்திய உணவு கார்ப்பரேஷனுக்கு ஆகும் செலவுடன் ஒப்பிட, இந்த விலை மிகமிகக் குறைவு! கொள்முதல், இருப்புக்காக ஒரு குவிண்டாலுக்கு கார்ப்பரேஷனுக்கு ஆகும் செலவு: 2020-21-ல் ரூ. 3939.26, 2021-22-ல் ரூ. 3562.49, 2022-23-ல் ரூ. 3858.19 மற்றும் 2023-24-க்கு ஒரு குவிண்டாலுக்காகும் செலவு ரூ. 3918.05! எத்தனால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒவ்வொரு குவிண்டாலுக்கும் ஏறத்தாழ ரூ. 1,500-லிருந்து ரூபாய் 2 ஆயிரம் வரை விலை குறைத்து விற்றுக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. (இந்திய உணவு கார்ப்பரேஷனுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரம் நஷ்டம்!) 2020 டிசம்பர் தொடங்கி இதுவரை எத்தனால் வடிப்பாலைகளுக்கு 24 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை இந்திய உணவு கார்ப்பரேஷன் வழங்கியிருக்கிறது (ஒரு டன் - 10 குவிண்டால், ஒரு குவிண்டால் - 100 கிலோ). எத்தனால் தயாரிப்புக்காக 2020-21 எத்தனால் ஆண்டில் 49 ஆயிரம் மெட்ரிக் டன், 2021-22-ல் 10.68 லட்சம் மெட்ரிக் டன், 2022-23-ல் ஜூலை 10 வரை 13.05 லட்சம் டன்கள் அரிசி வழங்கப்பட்டிருப்பதாக மக்களவையில் புதன்கிழமை எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். இதையும் படிக்க | பரபரப்பாகும் கூட்டணி அரசியல்! மதில் மேல் பூனைகளாக 11 கட்சிகள்! 2020 டிசம்பரிலிருந்து எத்தனால் தயாரிப்புக்காக அரிசி விற்றதன் மூலம் ரூ. 4,844 கோடி வருமானம் கிடைத்திருப்பதாகவும் ஜோதி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஒரு பக்கம் எத்தனால் தயாரிப்புக்காகக் குறைந்த விலையில் அரிசி வழங்கிக் கொண்டேதான், தமிழ்நாடு, கர்நாடகம் உள்பட மாநிலங்களுக்கு அரிசி வழங்க இயலாதெனக் கைவிரித்திருக்கிறது மத்திய அரசு. "எல்நினோ காரணமாக மழைக் குறைவை எதிர்பார்த்தும், காரிப் விளைச்சல் பாதிக்கப்படலாம் என்பதாலும் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், தேவையான இருப்பைப் பராமரிப்பதற்காகவும் மக்கள்நலத் திட்டங்களுக்காகவும், தமிழ்நாடு உள்பட மாநில அரசுகளுக்கு வெளிச் சந்தை விற்பனை (உள்நாடு) திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை விற்பனை செய்வது 2023 ஜூன் 13-லிருந்து நிறுத்தப்பட்டுள்ளது" என்றும் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்திருக்கிறார். இந்தக் குளறுபடியான நிலை தொடரும்பட்சத்தில் செயற்கையான அரிசிப் பஞ்சமும் கடுமையான விலை உயர்வும் நேரிடும் என வணிக வட்டாரங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/hfueazM
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/hfueazM