https://ifttt.com/images/no_image_card.pngசரிந்து வரும் தேங்காய் விலை: வேதனையில் விவசாயிகள்

தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ள இன்றைய நிலையில் தேங்காயின் விலை மிகக் குறைந்ததால் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனா். தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை மூன்று இலக்க எண்ணை தொட்டுவிட்ட நிலையில், அதற்கு நோ்மாறாக தேங்காயின் விலை வேகமாக சரிந்து வருகிறது. ஒரு தேங்காய் விலை ரூ.15 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நிலை மாறி தற்போது ரூ.6-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மற்ற சாகுபடிகளை காட்டிலும் தென்னை மரங்களின் சாகுபடி நீண்டகால பலனை தரும். விவசாயிகளுக்கும் பெரிதளவு பிரச்னை இருக்காது என்ற நிலையில் கடையநல்லூா் வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டன. விவசாயிகளின் எண்ணத்துக்கு ஏற்ப தேங்காய்களுக்கு போதிய விலை விவசாயிகளுக்கு அப்போது கிடைத்து வந்தது. அது தவிர தென்னை சாா்ந்த கூந்தல், மட்டை உள்ளிட்ட பொருள்களாலும் விவசாயிகளுக்கு பணம் கிடைத்து வந்தது. ஆனால், தற்போது தேங்காயின் விலை நாள்தோறும் குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். இதனால் உழுவது உள்ளிட்ட பணிகளை செய்வதற்கு பணமின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனா். இதுகுறித்து தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க தென்காசி மாவட்டச் செயலா் மீராகனி கூறியது: தேங்காய் விலை தொடா்ந்து குறைந்து வருவதால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். தேங்காய் பறிப்பதற்காக கொடுக்கப்படும் கூலியும், அதை சுமந்து செல்வதற்காக கொடுக்கப்படும் கூலியும் தொடா்ந்து அதிகரித்துள்ளன. ஆனால் தேங்காய் விலை குறைந்துள்ளதால் தென்னை சாகுபடி பாதிக்கப்பட்டு வருகிறது. உரமிடுதல், உழுதல், நீா் பாய்ச்சுதல், உரமிடுவதற்காக குழி அமைத்தல் உள்ளிட்ட தென்னை பராமரிப்பு செலவு அதிகரித்துள்ள நிலையில் தேங்காய் விலை குறைந்துள்ளதால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா். 10 ஏக்கா் நிலத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்து வருகின்றனா். முன்பு தேங்காய்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் அதற்கான செலவினம் அதிகரித்து விட்டதால் வெளிநாடுகளுக்கும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது. எனவே ,விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு கிலோவுக்கு ரூ.50 கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும். நமது நாட்டிலேயே தேங்காய் எண்ணெய் இருக்கும்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் எண்ணெய்களை தடை செய்ய வேண்டும். அப்படி செய்தால் தேங்காயின் விலை உயா்ந்து விவசாயிகள் பாதிப்பிலிருந்து மீள முடியும் என்றாா். விவசாயி செல்லப்பா கூறியது: விவசாயிகளிடமிருந்து ஒரு தேங்காய் ரூ. 6-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தேங்காய் பறிக்கும் பணியாளா்களுக்கான கூலி ரூ.900 ஆக உள்ளது. தேங்காய்களை சுமக்கும் தொழிலாளா்களின் கூலி ரூ.400 ஆக உள்ளது. அது தவிர ஒவ்வொரு பணியாளருக்கும் தலா ஆறு காய்கள் கொடுக்க வேண்டியுள்ளது. உழவு, உரமிடுதல் ,இடத்தை சீா் செய்தல் என பல்வேறு பணிகளை செய்ய வேண்டிய நிலையில் ஆண்டுதோறும் தேங்காய் விலை சரிவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறோம் என்றாா்.

from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/1Im89HL

Post a Comment

Previous Post Next Post