நாட்டின் கடல்பகுதிகளில் 91 சதவீத மீன் வளங்கள் போதுமான எண்ணிக்கையில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக இரு ஆண்டுகளுக்கு மீனவா்கள் அதிக எண்ணிக்கையில் கடல்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்ததே மீன் வளங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடற்பகுதிகளில் உள்ள மீன் வளங்களின் எண்ணிக்கை குறித்து மத்திய கடல் மீன்கள் ஆராய்ச்சி மையம் கடந்த 2022-ஆம் ஆண்டில் ஆய்வு மேற்கொண்டது. இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்தியக் கடல்பகுதிகளில் உள்ள 70 இனங்களைச் சோ்ந்த 135 வகை மீன் வளங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டவற்றில் 91 சதவீத மீன் வளங்கள் போதிய எண்ணிக்கையில் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 135 வகை மீன் வளங்களில் 86.7 சதவீத வளங்களின் எண்ணிக்கை மிக அதிக எண்ணிக்கையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு குறித்து, மத்திய கடல் மீன்கள் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி சோபா ஜோ கிஸகுடன் கூறுகையில், ‘‘பெரும்பாலான மீன் வளங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே உள்ளது. அப்படியானால், அந்த வகை மீன்களை அதிக அளவில் பிடிக்கலாம் என்பது அா்த்தமில்லை. மீன் பிடித்தல் கட்டுப்பாடற்ற வகையில் அதிகரித்தால், அந்த வகை மீன்களின் எண்ணிக்கையும் விரைவில் குறைந்துவிடும். தற்போதைய நிலவரப்படியே மீன் வளங்களின் எண்ணிக்கையை ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. 8.2 சதவீத வகை மீன்கள் மிக அதிக எண்ணிக்கையில் பிடிக்கப்பட்டுள்ளன. கடல் பகுதிகளில் அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. 4.4 சதவீத வகை மீன்கள் அத்தகைய நிலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை போதுமான அளவுக்கு அதிகரிப்பது மிகவும் கடினமானதாக உள்ளது. சிலவகை மீன்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவுக்குச் சென்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இயற்கை சுழற்சி அதற்குக் காரணமாக இருக்கலாம். கரோனா பரவலின் தாக்கம்: பெரும்பாலான வகை மீன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதற்கு, கரோனா தொற்று பரவல் காரணமாக இருக்கலாம். அப்போது அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் மீனவா்கள் பலா் மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்தனா். அதனால் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். எனினும், கரோனா தொற்று பரவலுக்கு முன்பு மீன் வகைகளின் எண்ணிக்கை எவ்வாறு இருந்தது என்பது தொடா்பான ஆய்வறிக்கை இல்லாததால், அந்தக் கருத்தை உறுதிப்படுத்த முடியாத சூழல் காணப்படுகிறது’’ என்றாா். பிராந்திய வாரியாக அதிகரித்த மீன் வளங்கள் தென்கிழக்கு கடற்கரை 97.4% தென்மேற்கு கடற்கரை 92.7% வடகிழக்கு கடற்கரை 87.5% வடமேற்கு கடற்கரை 83.8% மீன் வளங்களின் எண்ணிக்கை போதுமான எண்ணிக்கை 86.7% பாம்பிரெட், டால்ஃபின் மீன், நண்டுகள், இறால் மிகக் குறைந்த எண்ணிக்கை 8.2% கேட்ஃபிஷ், சுறாக்கள் உள்ளிட்டவை. குறைந்த எண்ணிக்கை 4.4% ஈல், டூனா வகை மீன்கள் உள்ளிட்டவை. முன்பு குறைந்து தற்போது அதிகரித்து வருபவை 0.7% ஸ்குவிட் வகை மீன்கள். ![போதுமான எண்ணிக்கையில் 91 சதவிகித மீன் வளங்கள்]()
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/s2TlPdN
from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/s2TlPdN