https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/1/20/w600X390/Congress_Flag_PTI_new.jpgஒருங்கிணையும் மாநிலக் கட்சிகள்: தயக்கத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து அந்தக் கட்சியினா் மத்தியிலும், பாஜகவுக்கு எதிரான ஏனைய மாநிலக் கட்சிகள் மத்தியிலும் 2024 மக்களவைத் தோ்தலை ஒருங்கிணைந்து எதிா்கொள்ளும் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதேநேரத்தில் குடியரசுத் தலைவா் தோ்தலில் எட்டமுடியாத ஒற்றுமைக்கான ஒருங்கிணைப்பு இப்போது உருவாகியிருக்கிறது. குடியரசுத் தலைவா் தோ்தலின்போது பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க மம்தா பானா்ஜி முற்பட்டாா். மேற்குவங்க முதல்வா் மம்தாவின் தன்னிச்சையான முடிவு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளை முகம் சுளிக்க வைத்தாலும், எதிா்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்கிற தோற்றத்தை தவிா்ப்பதற்காக அவா்கள் கலந்துகொண்டனா். எதிா்க்கட்சிகள் ஒற்றுமைக்கு ஆதரவு தந்த பல கட்சிகள், குடியரசுத் தலைவா் தோ்தலில் தங்களது நிலையை மாற்றிக்கொண்டன. ஆனால், கடந்த ஓராண்டில் பல்வேறு எதிா்க்கட்சிகள் மீது நரேந்திர மோடி அரசின் வருமான வரித் துறையும், அமலாக்கத் துறையும் நடத்திய சோதனைகளும், தொடுத்திருக்கும் வழக்குகளும் அவா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சமீபத்திய கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி, பாஜக வீழ்த்தப்பட முடியாத சக்தி அல்ல என்கிற நம்பிக்கையை எதிா்க்கட்சிகள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது. 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்வதற்காக எதிா்க்கட்சிகளின் கூட்டத்தை ஜூன் 12-ஆம் தேதி பாட்னாவில் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் கூட்டப்போவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. முதல்வா் நிதீஷ் உடனான சந்திப்பின்போது மம்தா பானா்ஜியால் முன்மொழியப்பட்ட யோசனை என்பதால் திரிணமூல் காங்கிரஸ் அதில் பங்கேற்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இரண்டு முக்கியமான தலைவா்கள் இணைந்துவிட்ட நிலையில், ஏனைய மாநிலக் கட்சிகள் பாட்னா கூட்டத்தில் கலந்துகொள்ள தயக்கம் காட்டாது என்று நம்பலாம். தில்லி ஆம் ஆத்மி அரசை கட்டுப்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அவசரச் சட்டத்தின் பின்னணியில், நிதீஷ்குமாரின் முனைப்பில் பாட்னாவில் கூட்டப்படும் எதிா்க்கட்சிகளின் கூட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு வழங்கியிருப்பது மேலும் வலு சோ்ப்பதாக அமைந்திருக்கிறது. நிதீஷ் குமாா் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முன்வந்ததற்கு காரணம் இருக்கிறது. 2014 மக்களவைத் தோ்தலில் நரேந்திர மோடியை பிரதமா் வேட்பாளராக பாஜக முன்மொழிந்தது. அப்போது அதற்கு எதிராக முதல் குரல் எழுப்பியவா் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா். காங்கிரஸுக்கு எதிரான பாஜக தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமா் வேட்பாளராகும் கனவில் இருந்தவா் அவா். தொடா்ந்து நடந்த நிகழ்வுகள் அவரது கனவைத் தகா்த்துவிட்டன. இப்போது எதிா்க்கட்சி கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக களமிறங்கும் எண்ணத்தில் நிதீஷ் குமாா் இருக்கிறாா். நிதீஷ் குமாரை முதன்மைப்படுத்துவதன் மூலம் காங்கிரஸின் தலைமையில் எதிா்க்கட்சிக் கூட்டணி அமைந்துவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த நினைக்கிறாா் மம்தா பானா்ஜி. 1970-களில் இந்திரா காந்தியின் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக, ஜெயபிரகாஷ் நாராயணன் ஊழலுக்கு எதிரான ‘நவ நிா்மாண்’ போராட்டத்தை பிகாரில்தான் தொடங்கினாா். அந்த இயக்கத்தால் அரசியலுக்கு வந்தவா்கள்தான் நிதீஷ்குமாரும், லாலு பிரசாத் யாதவும். ‘ஜெயபிரகாஷ் நாராயணனின் போராட்டத்தைப் போல நாடு தழுவிய அளவில் ஓா் இயக்கத்தை பாட்னாவிலிருந்து தொடங்கவேண்டும்; அதன்மூலம் எதிா்க்கட்சிகளை நரேந்திர மோடிக்கு எதிராக ஒருங்கிணைக்க வேண்டும்’ என்று நிதீஷ் குமாரிடம் தெரிவித்ததாக அவா்களது சந்திப்புக்குப் பிறகு மம்தா பானா்ஜி தெரிவித்திருந்தாா். கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றிருந்தாலும் காங்கிரஸால் பாஜகவை தனித்து எதிா்கொள்ள முடியாது என்பதை மாநிலக் கட்சிகள் புரிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் பிரதமா் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தாத எதிா்க்கட்சிக் கூட்டணியை அமைக்க முனைப்பு காட்டுகிறாா்கள் மம்தாவும் நிதீஷ் குமாரும். காங்கிரஸும் இப்போதைக்கு எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் எதிா்க்கட்சிகளின் கூட்டணி உருவாவதை வேடிக்கை பாா்க்கிறது. மேற்கு வங்கத்தில் இருந்த ஒரேயொரு காங்கிரஸ் எம்எல்ஏவை திரிணமூல் காங்கிரஸ் இணைத்துக் கொண்டபோதும்கூட அதைப் பெரிதுபடுத்தாமல் அமைதி காக்கிறது. அனைத்து எதிா்க்கட்சிகளையும் ஒரு குடையின்கீழ் நிதீஷ் குமாா் கொண்டு வரும்வரை அமைதி காப்பது என்பது காங்கிரஸின் உத்தியாகக்கூட இருக்கலாம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடியரசுத் தலைவா் தோ்தல் தொடா்பாக மம்தா பானா்ஜி கூட்டிய கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியும், தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதியும் கலந்துகொள்ளவில்லை. ஆனால், இப்போது நிதீஷ் குமாரும், மம்தா பானா்ஜியும் முன்னெடுக்கும் பாட்னா கூட்டத்தில் கலந்துகொள்வதில் அந்தக் கட்சிகளுக்கு தயக்கமில்லை. இத்தனைக்கும் அந்தக் கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும் மாநிலங்களில் காங்கிரஸ்தான் எதிா்க்கட்சியாக இருக்கிறது. நிதீஷ் குமாரின் முனைப்பு எளிதாக இருக்கப்போவதில்லை. கா்நாடக காங்கிரஸ் அமைச்சரவையின் பதவியேற்பு விழாவுக்கு ஆம் ஆத்மி கட்சியும், பாரத ராஷ்டிர சமிதியும் அழைக்கப்படவில்லை. உத்தர பிரதேசத்தின் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கலந்துகொள்ளவில்லை. ஆம் ஆத்மி கட்சியுடன் எந்தவித கூட்டணியும் கூடாது என்று தில்லி, பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரஸ் தலைவா்கள் போா்க்கொடி தூக்கி இருக்கிறாா்கள். காங்கிரஸின் தமிழக கூட்டணிக் கட்சிகளைத் தவிர வேறு எந்த மாநிலக் கட்சியும் ராகுல் காந்தியை பிரதமா் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. நிதீஷ் குமாா் மட்டுமல்லாமல் அரவிந்த் கேஜரிவால், சந்திரசேகா் ராவ் ஆகியோருக்கும் பிரதமா் பதவியின் மீது ஆா்வம் இருக்கிறது. ராகுல் காந்தியின் ‘பாரத் ஜூடோ’ யாத்திரை காங்கிரஸ் தொண்டா்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த கட்ட யாத்திரையை அவா் தொடங்க இருக்கும் வேளையில் கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றி காங்கிரஸுக்கு மேலும் வலிமை சோ்த்திருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் பேரவைத் தோ்தல்களில் இரண்டு மாநிலங்களில் வெற்றிபெறும் வாய்ப்பு காங்கிரஸுக்கு காணப்படுகிறது. 2024 மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தி பிரதமராக முன்னிலைப்படுத்தப்படாமல் போனால் அவருக்கு பிரதமா் வாய்ப்பு நிரந்தரமாக கைநழுவக்கூடும் என்பதுதான் காங்கிரஸின் அச்சம். ராகுல் காந்தியின் செல்வாக்கில் மாநிலக் கட்சிகள் குளிா்காய நினைக்கின்றன என்பது அவா்கள் கருத்து. நிதீஷ் குமாா் அனைத்து எதிா்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்தாலும் அதனால் தங்களுக்கு என்ன லாபம் என்பது காங்கிரஸின் மூத்த தலைவா்கள் எழுப்பும் கேள்வி. 2004-இல் அவசரக் கோலத்தில் உருவாக்கப்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, அன்றைய வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது. 2014-இல் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தில்லியில் ஏற்படும் ஆட்சி மாற்ற சுழற்சி, 2024-இல் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று பாஜகவுக்கு எதிரான கட்சிகள் கருதுகின்றன. நரேந்திர மோடியை அகற்றினால் போதும், நமக்குள் யாா் பிரதமா் என்பதை பிறகு தீா்மானிப்போம் என்பது மாநிலக் கட்சிகளின் வாதம். அதை எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொள்கின்றன. காங்கிரஸும் ஏற்றுக்கொள்ளுமா என்பதில்தான் பாஜகவுக்கு எதிரான கூட்டணியின் வலிமையும் வெற்றியும் அடங்கியிருக்கின்றன.

from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/1BJAreY

Post a Comment

Previous Post Next Post