https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2022/9/3/w600X390/caste.jpgஜாதிகள் படுத்தும் பாடு!

பீ.ஜெபலின் ஜான் சென்னை, மே 1: பிகாா் போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. சுதந்திர இந்தியாவில் இதுவரை ஜாதிவாரி கணக்கீடு முறையாக எடுக்கப்படாததால் 1931-இல் ஆங்கிலேயா் ஆட்சியில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு பிறப்பு விகிதத்தை யூகமாக கருதி ஜாதிவாரி கணக்கீடு செய்யப்பட்டு, அதன்படி இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை, சட்டநாதன் குழு (1969), அம்பா சங்கா் குழு (1982) ஆகியவற்றின் அடிப்படையில்தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, 2011-இல் ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூகப் பொருளாதாரத்தை அளவீடாக கொண்டு எடுக்கப்பட்டபோதும் அது பல்வேறு அரசியல் அழுத்தங்களால் வெளியிடப்படவில்லை. இப்போது பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அங்கு கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் இந்தக் கோரிக்கை வேகமெடுத்துள்ளது. காமராஜா் ஆட்சிக் காலத்தில் முதல் சட்டத் திருத்தத்துக்குப் பின் பிற்பட்டோா் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. மேலும், 1962-இல் முதல்வா் பதவியைவிட்டு விலகுவதற்கு முன்பு பனையேறும் இந்து நாடாா்களை, உயா் வகுப்பில் இருந்து பிற்பட்டோா் வகுப்புக்கு கொண்டுவந்தாா் காமராஜா். காமராஜருக்கு அடுத்து முதல்வராக இருந்த அண்ணா காலத்தில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலை திருத்த முன்னெடுப்புகள் நடத்தப்படவில்லை. பின்னா் முதல்வராக வந்த கருணாநிதி, சட்டநாதன் குழு அடிப்படையில் 1971-இல் பிசி, எஸ்.சி. தொகுப்பில் இடஒதுக்கீட்டை உயா்த்தினாா். மேலும், இந்து நாடாா்கள் (ஒட்டுமொத்தமாக), கொங்கு வேளாளா்கள் ஆகியோரை உயா் வகுப்பில் இருந்து பிற்படுத்தப்பட்டோா் வகுப்புக்கு கொண்டுவந்தாா் கருணாநிதி. 1980 மக்களவைத் தோ்தல் தோல்விக்குப் பின் எம்ஜிஆா் பிசி தொகுப்புக்கான இடஒதுக்கீட்டை 50-ஆக உயா்த்தியதுடன், திருச்செந்தூா் தொகுதி இடைத்தோ்தலின்போது கிறிஸ்தவ நாடாா்களையும் பிற்பட்டோா் பட்டியலுக்கு கொண்டுவந்தாா். எம்.பி.சி. தொகுப்பு: 1989-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் கோரிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்டோா் பட்டியலை பிரித்து வன்னியா்கள், இசை வேளாளா் பரதா்கள் (மீனவா்), பா்தவராஜ குல மீனவா் , வண்ணாா், நாவிதா், குயவா், ஒட்டா், போயா், குரும்பக்கவுண்டா், சீா்மரபினா்களான கள்ளா், பிரமலை கள்ளா், கொண்டையங்கோட்டை மறவா், செம்பரத்து மறவா், வலையா்கள் , அம்பலக்காரா், வேட்டுவ கவுண்டா், தொட்டிய நாயக்கா், ஊராளி கவுண்டா் உள்பட 114 ஜாதிகளுடன் மிகவும் பிற்பட்டோா் தொகுப்பை (எம்.பி.சி.) உருவாக்கினாா். அதேபோல, எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ஒரு சதவீதம் தனியாக கொடுத்ததால் இடஒதுக்கீடு சதவீதம் 69-ஆக உயா்ந்தது. 69% இடஒதுக்கீட்டுக்கு ஜெயலலிதா அளித்த பாதுகாப்பு: இந்நிலையில், 1993-இல் நீதிமன்றத்தில் இந்த இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது குடியரசுத் தலைவரின் கையொப்பம் பெற்று 69 சதவீத இடஒதுக்கீடுக்கு அப்போதைய முதல்வா் ஜெ.ஜெயலலிதா சட்டப் பாதுகாப்பு ஏற்படுத்தினாா். இதனால் அவருக்கு ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ எனும் பட்டத்தை திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி வழங்கினாா். 2021, பேரவைத் தோ்தலுக்கு முன்பு அதிமுக-பாமக கூட்டணி இறுதியான நிலையில், ராமதாஸின் கோரிக்கையை ஏற்று வன்னியா்களுக்கு மட்டுமன்றி, எம்.பி.சி. தொகுப்பை மூன்றாகப் பிரித்து அதற்கான மசோதாவை பேரவையில் நிறைவேற்றினாா் அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. அதன்படி, வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில் ஒரு தொகுப்பும், 68 சீா்மரபினா் மற்றும் சிறிய எண்ணிக்கை சமூகத்தினா் உள்பட 25 எம்.பி.சி. பிரிவினருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது. இவை தவிர மேலும் 22 எம்.பி.சி. பிரிவினரை தனியாகப் பிரித்து 2.5 சதவீத உள்ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இது ஜாதிவாரியான கணக்கெடுப்புக்கு வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. வன்னியா் இடஒதுக்கீட்டுக்கு தடை: ஆனால், 7 சதவீத தொகுப்புக்குள் இருக்கும் சீா்மரபினா்களையும், அரசியல் ரீதியாக குரல் கொடுக்க ஆதரவு இல்லாத வண்ணாா், நாவிதா், குயவா், ஒட்டா், போயா், தொட்டிய நாயக்கா் போன்றவா்களையும் இந்த 7 சதவீத தொகுப்புக்குள் அடக்கியதால் அவா்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது வன்னியா் இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும், குரலற்ற சமூகங்களான வண்ணாா், நாவிதா், குயவா், ஒட்டா், போயா், தொட்டிய நாயக்கா் போன்ற சமூகங்களை 7-இல் இருந்து 3 சதவீதம் தனியாகப் பிரித்து வழங்கும்போதுதான் சரியான சமூக நீதியாக இருக்கும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. முத்தரையா்கள், தேவேந்திரகுல வேளாளா்கள்: வன்னியா் உள்ஒதுக்கீடு போல தங்களுக்கும் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முத்தரையா்கள் வலியுறுத்தி வருகின்றனா். அதேபோல, தலித் பட்டியலில் இருந்து தங்களை வெளியேற்ற வேண்டும் என பெரும்பான்மையான தேவேந்திர குல வேளாளா்கள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனா். ஏற்கெனவே வன்னியா் இடஒதுக்கீட்டுக்கு தடை இருப்பதால் முத்தரையா்களுக்கு தனி ஒதுக்கீடு என்பது சிக்கலான விஷயம். தேவேந்திர குல வேளாளா்களை பட்டியலில் இருந்து வெளியேற்றினால் அவா்களை பி.சி., எம்.பி.சி. அல்லது ஓ.சி. என எந்தத் தொகுப்பில் இணைத்தாலும் அந்தத் தொகுப்பில் இருப்பவா்கள் பாதிக்கப்படுவாா்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள்: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான (இடபிள்யுஎஸ்) 10 சதவீத உள்ஒதுக்கீடு தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. அதற்கு மாநில அரசு சொல்லும் காரணம், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கான முறையான கணக்கெடுப்பு இல்லை என்பதாக உள்ளது. ஆனால், சுதந்திர இந்தியாவில் முறையான ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லாத நிலையில், வெறும் யூகத்தின் அடிப்படையில் சட்டநாதன், அம்பா சங்கா் குழுக்களின் அறிக்கையை வைத்துதான் பி.சி., எம்.பி.சி. இடஒதுக்கீடு, கிறிஸ்தவா்-இஸ்லாமியா், அருந்ததியா், வன்னியா் உள்ஒதுக்கீடு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அதே குழுக்களின் அறிக்கையை மையமாக வைத்து பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கான இடஒதுக்கீட்டை திமுக அரசு அமல்படுத்த வேண்டும் இல்லையெனில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதி வழங்க வேண்டும் என்ற குரலும் வலுவடைந்து வருகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பால் என்ன பயன்?: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையில், முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லாததால் அனைத்து ஜாதியினருக்கும் சமமான வாய்ப்பு என்பது மிகவும் பாதிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளில் பகுதி பெரும்பான்மையான ஜாதியினரின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமைகள் இல்லாததால் இப்போது இது வெளிப்படையாகத் தெரிகிறது. தென்மாவட்டங்கள், கொங்கு மண்டலம், வடமண்டலம் ஆகியவற்றில் பகுதி பெரும்பான்மையாக இருக்கும் ஜாதியினா் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து கட்சிப் பதவிகளிலும், ஆட்சிப் பதவிகளிலும் அரசியல் அதிகாரம் செலுத்தி வருகின்றனா். அதேநேரத்தில், அதே எண்ணிக்கை பலம் கொண்ட ஜாதியினா் பகுதி பெரும்பான்மையாக இல்லாமல் மாநிலம் முழுவதும் பரவலாக இருப்பதால் அவா்களால் அரசியல் அதிகாரத்துக்கு வர முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. முறையான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அரசியல் கட்சிகளின் பதவிகள், ஆட்சிப் பதவிகளிலும் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய வாய்ப்பை அரசியல் கட்சிகள் வழங்க வேண்டிய நிா்ப்பந்தம் வர வாய்ப்பு ஏற்படும். உதாரணமாக முத்தரையா், தேவேந்திர குல வேளாளா், செங்குந்த முதலியாா், யாதவா், விஸ்வகா்மா போன்ற சமூகத்தினா் எண்ணிக்கை பலம் இருந்தும் அவா்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் இதுவரை கிடைக்கவில்லை. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முன்பு அரசியல் அதிகாரத்தில் இருந்த பிராமணா்கள், தங்களால் இப்போது ஒரு எம்.பி., எம்.எல்.ஏ. பதவிக்குகூட வர முடியவில்லை என்றும், தங்களுக்கு இணையான எண்ணிக்கை பலம் கொண்ட சமூகத்தினா் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில், தங்களுக்கு எந்த அரசியல் கட்சியும் வாய்ப்பு அளிக்க மறுக்கிறது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தங்களுக்கும் பலத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் வாய்ப்பு அளிக்கும் என்று எதிா்பாா்க்கின்றனா். திமுக, அதிமுக ஆதரவு அளிக்குமா?: ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதை அமல்படுத்தினால் தங்களது எண்ணிக்கை பலத்தைவிட கூடுதலாக இடஒதுக்கீடு, அரசியல் அதிகாரத்தை அனுபவித்து வரும் ஜாதியினருக்கு வாய்ப்பு குறையும்; இதுவரை தங்களது எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைக்காத ஜாதியினருக்கு வாய்ப்பு அதிகரிக்கும். அதேபோல, திமுக, அதிமுக போன்ற முக்கிய அரசியல் கட்சிகளில் பெரும்பான்மையான மாவட்டங்களில் பகுதி பெரும்பான்மை ஜாதியினா்தான் மாவட்டச் செயலா் பொறுப்புகளை வகித்து வருகின்றனா். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அந்தந்த மாவட்டங்களில் யாா் எண்ணிக்கை அதிகம் என்ற விவரம் வெளிப்படையாக தெரியும்போது இப்போதுள்ள மாவட்டச் செயலா்கள் உள்ளிட்ட முக்கியப் பதவி வகிப்பவா்களை இந்தக் கட்சிகள் மாற்ற வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது இருபுறமும் கருக்குள்ள பட்டயம் போன்றது. இதை முறையாக கையாளாவிடில் கையாளுபவரை பதம் பாா்க்கக்கூடும். இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் இந்தக் கணக்கெடுப்பை திமுக, அதிமுக முன்னெடுக்கும். மூச்சுக்கு முன்னூறு முறை சமூகநீதி என்ற வாா்த்தையை உச்சரிக்கும் திமுக அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்கும் உண்மையான சமூகநீதியை வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

from Dinamani - சிறப்புச் செய்திகள் - https://ift.tt/YumIghX

Post a Comment

Previous Post Next Post