https://gumlet.vikatan.com/vikatan/2023-04/efcfedd5-27a4-4c8d-8d1a-706876710524/WhatsApp_Image_2023_04_05_at_20_39_12__1_.jpeg`குடிநீர், கழிவறை வசதிகூட முறையா இல்லை..!' - போராட்டத்தில் இறங்கிய சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் மாணவர்கள் முறையான குடிநீர், கழிவறை, உணவகம், சுகாதார மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும், மாணவிகளுக்கு விடுதியின் இரவுகால வரம்பை (curfew) நீட்டிக்கவும், அவர்களுக்கான சுகாதார நாப்கின்கள் வழங்கும் இயந்திரம் அமைக்கக் கோரியும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதேபோல, ஆய்வு மாணவர்களுக்கான பதிவுக் கட்டணம் 1,000 ரூபாயிலிருந்து, 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், மாணவப் பேரவைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தின் பிரதானக் கட்டடத்தின் முன்பு போராட்டத்தை நடத்தினர்.

மாணவர்கள் போராட்டம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முறையான கழிவறை, குடிநீர், உணவகம், சுகாதார மையம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை எனும் குற்றச்சாட்டு மாணவர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாக மாணவர்கள் பலமுறை புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் காலை 11 மணியிலிருந்து கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி, கோஷங்கள் எழுப்பிப் போராடினர். அதைத் தொடர்ந்து, மதியம் ஒரு மணியளவில் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்த காரணத்தால், ஆத்திரமடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர். 

மாணவர்கள் போராட்டம்

மாணவர்களின் முற்றுகைப் போராட்டம் மாலை வரை நீடித்தது. அதையடுத்து, மாணவர்களின் கோரிக்கைகளில் பலவற்றை ஒரு மாதத்துக்குள் நிறைவேற்றித் தருவதாகவும், மற்ற கோரிக்கைகளை விரைவில் பரிசீலனை செய்வதாகவும் பல்கலைக்கழகப் பதிவாளர் ஏழுமலையின் கையொப்பத்துடன் எழுத்துபூர்வமாக உறுதியளிக்கப்பட்டதால், மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.



from Latest news

Post a Comment

Previous Post Next Post