திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குத் தனிச் சிறப்பு உண்டு. 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் கந்தனின் பாதம் கனவிலும் காக்கும் என்பது சிவன்மலை முருகப்பெருமானின் அருள்வாக்காகும்.
இந்தக் கோயிலில் சிறப்பம்சம் ஆண்டவன் உத்தரவுப் பெட்டியாகும். முருகப் பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி, ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட வேண்டிய பொருளைக் கூறுவதும், அந்தப் பெட்டியில் அப்பொருளை வைத்து பூஜை செய்யப்படுவதும் பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நியமம்.
கனவில் முருகப்பெருமானின் உத்தரவு கிடைக்கப் பெற்ற பக்தர் கோயில் நிர்வாகத்தை அணுகினால், கோயில் நிர்வாகிகள் சாமியிடம் பூப் போட்டுக் கேட்டு பின்னர், பக்தரின் கனவில் வந்த பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க ஏற்பாடு செய்வர்.
அதன்படி, திண்டுக்கல் ரயில் நிலையப் பகுதியைச் சேர்ந்த கற்பகம் என்ற பெண்ணின் கனவில், முருகப் பெருமான் உத்தரவான நந்தியாவட்டைப் பூ, அருகம்புல், துளசி ஆகியவை தோன்றின.
இதை அவர் கோயில் நிர்வாகத்தில் தெரிவிக்க, உடனே பூப்போட்டுப் பார்த்து முருகப்பெருமானின் உத்தரவு பெற்று அந்தப் பொருள்களை புதன்கிழமை முதல் உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜை செய்தனர்.
இதற்கு முன்பு, ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் கடந்த 13-ம் தேதி முதல் 7 கிலோ அரிசி, 5 லிட்டர் நல்லெண்ணெய் வைத்து பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
from Latest news