https://ift.tt/OCdgnW5 "கருணாநிதிக்கு பேனா சின்னம் வைப்பதில் தவறில்லை; ஆனால்...." - அன்புமணி ராமதாஸ் ஆலோசனை

கலைஞர் கருணாநிதிக்கு பேனா சின்னம் வைப்பதில் தவறில்லை என்று ஓமலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சிக்கம்பட்டி தனியார் மண்டபத்தில், சேலம் மாவட்ட பாமக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது அவர், “சேலம் மாவட்டத்தில் நீண்ட கால பிரச்சினை, மேட்டூர் உபரி நீர் பிரச்சினை. 20 ஆண்டுகளாக அதற்காக போராடி வருகிறோம். பலவகை போராட்டங்களுக்குப் பிறகு கடந்த ஆட்சியில் முதல் கட்டமாக ரூ 550 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. இது போதுமானதல்ல. உபரி நீரில் 5 டி.எம்.சி தண்ணீரை சேலம் மாவட்ட மக்கள் பயன்படுத்திடும் வகையில் விரிவுபடுத்தி தொடங்க வேண்டும். இதேபோல பனமரத்துப்பட்டி ஏரியில் ஒரு டி.எம்.சி தேக்கி வைக்க வேண்டும். இதை சேலத்திற்கு ஆய்வுக்காக வந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

வருங்காலத்தில் கால நிலை மாற்றம் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கப்போகிறது. வரும் ஆண்டுகள் மிகவும் வெப்பமானதாக இருக்கும் என அறிவியலாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள். இதை எதிர்கொள்ள மழை காலத்தில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். 
 
image

சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை உடனே தொடங்க வேண்டும். நூல் விலை ஏற்றத்தால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். சேலம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பதாக ஆட்சியர் சொல்லி உள்ளார். போதைப் பொருளை தடுக்க முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதாமாதம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்களுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்த வேண்டும். போதைப் பொருள் விற்பனை, கல்லூரிகளைத் தாண்டி பள்ளிகளில் பரவி உள்ளது. இது தொடர்ந்தால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படும் என்பதால் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. காவல் துறையில் பணிபுரிந்தவர் ஏன் மறுக்கிறார் என தெரியவில்லை. இதுவரை 14 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு முழு காரணம் ஆளுநர்தான். அவசர சட்டத்திற்கு அனுமதி அளித்தவர், சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது ஏன் என தெரியவில்லை. 3 மாத காலம் கிட்டத்தட்ட 100 நாட்கள் அப்படியே வைத்துள்ளது ஏன்? திருப்பி அனுப்ப வேண்டும். இல்லையெனில் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும். லட்சக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கும் பிரச்சினை இது.

image

இரும்பாலை மிகக்குறைந்த விலைக்கு நிலத்தை எடுத்துள்ளனர். பொதுத்துறை நிறுவனங்களை விற்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நிச்சயமாக இதனை லாபமாக மாற்றலாம். ஆனால் வேண்டுமென்றே செய்கிறார்கள். பொது நிறுவனங்கள் இருந்தால்தான் சமூக நீதி பாதுகாக்கப்படும். பொது நிறுவனங்கள் இல்லையெனில் இட ஒதுக்கீடு கிடைக்காது. ஏழை மக்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு பொது நிறுவனங்களில்தான் கிடைக்கும். சேலம் இரும்பாலையை விற்க விட மாட்டோம். இந்த மாதம் என் தலைமையில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம். நடத்த முடியவில்லையெனில் சேலம் இரும்பாலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளிடம் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை கடந்த 15 ஆண்டுகளாக வளர்ந்து தற்போது உச்சத்தில் உள்ளது. அண்டை நாடுகளில் இருந்து இங்கு கஞ்சா வருகிறது. ஆனால் காவல்துறைக்கு தெரியாமல் யாரும் விற்க முடியாது. விற்பனை செய்பவர்களை கைது செய்வதுடன், மூல காரணமானவர்களை கண்டறிய வேண்டும். அதே நேரத்தில் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இல்லை. 20 ஆயிரம் பேர் தேவைப்படும் இடத்தில், 700 பேர் மட்டுமே போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் காவல்துறையில் உள்ளனர்.

image

வடமாநிலத்தவர் தமிழகத்தில் அதிகளவில் வரும் பிரச்சினையில் முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வருபவர்கள் குறித்த முழுவிவரங்களை காவல்துறையினர் சேகரிக்க வேண்டும். எங்களுடைய கொள்கை ஆசை தமிழ் ஈழம் வரவேண்டும் என்பதுதான். அது எப்படி வர வேண்டும் என்பதை உலகத்தில் உள்ள தமிழர்கள் கூடி முடிவு செய்ய வேண்டும். பழ.நெடுமாறன் சொன்னதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது எனத் தெரியவில்லை. அவர் சொன்னபடி வரட்டும் பார்க்கலாம்.

டாஸ்மாக் கடையினால் தமிழக இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிபோதையில் வேலைக்கு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. வடமாநில இளைஞர்கள் குறைந்த சம்பளத்துக்கு வருவதாக உள்ளது. பல்வேற கருத்துகள் உள்ளது. வேலை என்றால் எல்லாமே வேலைதான். தமிழ் இளைஞர்கள் எந்த வேலையாக இருந்தாலும் செய்ய வேண்டும். 2026-ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். அதற்கேற்ற பணிகளை திட்டமிட்டு நடத்தி வருகிறோம். பூத் அளவில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சியை வலுப்படுத்தி வருகிறோம்.
 
கலைஞர் மீது எங்களுக்கு அதிக மரியாதை உள்ளது. தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு அதிக பாசம் உண்டு. கலைஞர் இறந்த பிறகு அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, மெரினாவில் எந்த கட்டுமானமும் செய்யக்கூடாது என நாங்கள் போட்ட வழக்கு தடையாக இருந்தது. அன்றைய தினமே எங்களின் வழக்கு திரும்ப பெற்றோம். நாங்கள் வழக்கு திரும்ப பெறவில்லையெனில் கலைஞர் அவர்களை அடக்கம் செய்திருக்க முடியாது. கலைஞரின் நினைவிடம் அருகிலேயே பேனா அமைக்கலாம். கடலில் அமைப்பதால் சுற்றுச்சூழல், மீனவர் நலன் பாதிக்கப்படும். மற்றவர்களும் போட்டி போடுவார்கள். எனவே கடலை விட்டு விடுங்கள். கலைஞரின் நினைவிடம் அருகிலேயே பேனா நினைவு சின்னம் தாராளமாக அமைக்கலாம்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post