சோழவரம் அருகே காணாமல் போன சேலம் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிற்றுண்டிக் கடையில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தகராறில் ஈடுபட்டதால் உருட்டுக்கட்டையால் அடித்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தேவியாகுறிச்சி பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார்(25) என்பவர், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த நல்லூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி சேலத்தில் உள்ள தமது தங்கையிடம் செல்போனில் பேசிவிட்டு பின்னர் அவருடைய போன் சுவிட்ச் ஆப் ஆனதாகவும், அதன் பின்னர் பிரவீன் குமாரை தொடர்பு கொள்ளமுடியவில்லை எனவும் அவரது தந்தை சக்திவேல்(47), சோழவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதனடிப்படையில் பிரவீன் வேலை பார்த்துவந்த நல்லூர் பகுதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அங்குள்ள செல்லியம்மன் கோவில் குளத்தில் பிரவீன் குமாரின் உடல் மிதப்பது தெரியவந்துள்ளது. சடலத்தை மீட்டு பார்த்தபோது தலையில் நெற்றிப்பகுதியில் 2 வெட்டுக்கள் இருந்தது தெரியவந்ததால் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பிரவீன் குமாரை கொலைசெய்து குளத்தில் வீசியதாகவும், அதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் நல்லூர் பகுதியில் உள்ள சிற்றுண்டி கடையில் கடந்த திங்களன்று இரவு தமது நண்பருடன் பிரவீன்குமார் உணவருந்த சென்றபோது கடையில் பணம் தராமல் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிற்றுண்டி உரிமையாளரான பெண் தமது மகனிடம் கூறியதையடுத்து சிற்றுண்டி கடை உரிமையாளரின் மகன் நரேஷ் என்பவர் பிரவீன்குமாரை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பிரவீன்குமார் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிற்றுண்டி கடை உரிமையாளரின் மகன் நரேஷை சோழவரம் போலீசார் கைது செய்தனர். சிற்றுண்டி கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News