முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
``நடக்கும் உண்மையை அப்படியே சொல்லியிருக்கிறார் மம்தா. நாமிருவர் நமக்கிருவர் என்பது போல, மோடியும், அமித் ஷாவும் அதானி, அம்பானிகளுக்காகத்தான் ஆட்சியே நடத்துகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் அதானியின் வளர்ச்சி விகிதத்தைப் பாருங்கள். உலகப் பணக்காரராகவே மாறியிருக்கிறார். இதுதான் மோடி அரசின் சாதனை. `கறுப்புப் பணத்தை ஒழிக்க, பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்தோம்’ என்றார். ஆனால், மொத்தப் பணமும் திருப்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. அப்படியென்றால், நாட்டிலிருந்த கறுப்புப் பணமெல்லாம் எங்கே போனது... இதன் மூலம் தன் நெருங்கிய சகாக்களான தொழிலதிபர்களின் கறுப்புப் பணத்தைச் சட்டபூர்வமாக வெள்ளையாக்கிக் கொடுக்க உதவியிருக்கிறார்கள் என்பதுதானே உண்மை. அதானி விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து நாடாளுமன்ற உயர்மட்டக்குழு விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோருகின்றன. விசாரணைக்கு ஒப்புதல் வழங்குவதில் பா.ஜ.க அரசுக்கு என்ன பிரச்னை... மக்களின் பணத்தை, தன் நண்பர்களின் வளர்ச்சிக்காக வாரி இறைத்துக்கொண்டிருக்கிறது இந்த அரசு. அவர்களைப் பாதுகாக்கத் தேவையான விஷயங்களையும் செய்கிறது. இவையனைத்தும் இப்போது வெளியே வந்துவிட்டதால், பதில் சொல்லாமல் தவிர்க்கிறார்கள் என்பதே யதார்த்தமான உண்மை.’’
நாராயணன் திருப்பதி, மாநில துணைத் தலைவர், பா.ஜ.க
``எந்த அடிப்படைப் புரிதலும் இல்லாமல் பேசியிருக்கிறார் மம்தா. இந்த விவகாரத்தில் எல்.ஐ.சி-யும், ஸ்டேட் பேங்க்கும், தாங்கள் எந்த நஷ்டமும் அடையவில்லை என்று மிகத் தெளிவாக பதில் சொல்லிவிட்டன. அந்த பதில்கள் அனைத்துமே ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு வெளிநாட்டுத் தனியார் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அதானி, தனது தரப்பு பதிலை வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். இதற்கும் அரசுக்கும் என்ன தொடர்பிருக்கிறது... அரசு ஏன் பதில் சொல்ல வேண்டும்... இதே மேற்கு வங்கத்தில், மம்தாவின் சொந்தக் கட்சியினரான முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், இளைஞரணித் தலைவர் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அங்கு நடைபெறும் ஊழல்கள் குறித்து, பெரிய பட்டியலே போடலாம். அவர்களுக்கு பா.ஜ.க குறித்துப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது... கடந்த ஒன்பது ஆண்டுகால மத்திய பா.ஜ.க ஆட்சிமீது இதுவரை ஓர் ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. அதனால், அதானி விவகாரத்தை ஏதோ பெரிய ஊழல் குற்றச்சாட்டு சிக்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு, எந்தப் புரிதலும் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க-மீது குற்றம் சுமத்தும் அவர் ஏன் இதுவரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை. வெறும் கையில் முழம் போட்டு என்ன பயன்... எந்த முகாந்திரமும் இல்லாமல் அரசைக் குற்றம் சொல்வது வீண் வேலை.’’
from Tamilnadu News