புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``அதானி குழும விவகாரத்தில் மக்களவையில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்காதது ஜனநாயகத்தை அவர் மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. ஆகவே, உச்ச நீதிமன்ற மேற்பார்வையிலோ அல்லது மக்களவை நிலைக்குழுவின் மூலமோ அதானி குழும விவகாரத்தை விசாரிக்க வேண்டியது அவசியம். விசாரணையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதானி குழுமத்துடனான தொடர்புகள் வெளிப்படும். புதுச்சேரி காரைக்கால் துறைமுகத்தையும் மறைமுகமாக அதானி குழுமம் வாங்கியிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கிருந்தும், புதுச்சேரி அரசைக் கலந்தாலோசிக்காமலே குறிப்பிட்ட நிலம் அந்தக் குழுமத்துக்கு விற்கப்பட்டிருக்கிறது. ஆகவே அது குறித்தும் விசாரிக்கப்படவேண்டும். புதுச்சேரி அரசுக்கு மத்திய பா.ஜ.க அரசானது, நடப்பாண்டில் ரூ.3,251 கோடி நிதி அளித்திருப்பதாக முதல்வரும், அமைச்சர்களும் பெருமைப்படுவது சரியல்ல.
புதுச்சேரி மாநிலத்துக்கான ஜி.எஸ்.டி பங்கு, ஏழாவது ஊதியக்குழு ஆகியவற்றை சேர்த்தே நிதி வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசிடமிருந்து 28 சதவிகித நிதி பெறப்பட்ட நிலையில், தற்போது 22 சதவிகித நிதி மட்டுமே பெறப்படுகிறது. மத்திய அரசு புதுச்சேரிக்கு சிறப்பு நிதியாக ரூ.1,400 கோடி அளித்ததாக சட்டப்பேரவைத் தலைவர், முதல்வர் கூறியது குறித்து விளக்க வேண்டும். மத்திய அரசு புதுச்சேரிக்கு அளித்த நிதி குறித்து முதல்வர், அமைச்சருடன் மேடையில் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். அவர்கள் தயாரா என்பதைக் கூறவேண்டும். நான் எம்.பி-யாக இருந்தபோது எதுவும் செய்யவில்லை என பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறியிருக்கிறார். நான் எம்.பி-யாக இருந்தபோதுதான், புதுவைக்கு 13, காரைக்காலுக்கு 6 ரயில்கள் விடப்பட்டன. காரைக்காலில் என்.ஐ.டி கொண்டு வரப்பட்டிருக்கிறது. கேந்திர வித்யாலயா பள்ளிகளை திறந்திருக்கிறேன். மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்து 8 ஆண்டுகளாகியும் புதுவைக்கு புதிதாக ஏதேனும் ரயில்கள் விடப்பட்டிருக்கிறதா?
காங்கிரஸ் ஆட்சியில் தனி கணக்கு தொடங்கியதுதான் மாநிலத்தின் பின்னடைவுக்குக் காரணம் என சாமிநாதன் கூறுகிறார். ரங்கசாமி காங்கிரஸ் முதலமைச்சராக இருந்தபோதுதான் தனி கணக்கு தொடங்கப்பட்டது. வெளி மார்க்கெட்டில் கடன் வாங்க வேண்டும் என்பதற்காக ரங்கசாமி தனி கணக்கு தொடங்கினார். அதிகாரிகள் திட்டங்களை தடுக்கின்றனர் என புதுவை அமைச்சர்கள் புலம்ப தொடங்கியிருக்கின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் உங்கள் ஆட்சி நடக்கும்போது ஏன் புலம்ப வேண்டும்... ஒத்துழைக்காத அதிகாரிகளை மாற்ற வேண்டியதுதானே... முதலமைச்சர் அலுவலகத்தில் ஏற்கெனவே நான்கு புரோக்கர்கள் இருப்பதாக கூறி வந்தேன். தற்போது கூடுதலாக ஒரு புரோக்கர் உருவாகியிருக்கிறார். அமைச்சர்கள் அலுவலகங்கள் புரோக்கர்களின் அலுவலகங்களாக மாறிவருகின்றன.
தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறேன். இதற்கு எந்த அமைச்சர்களோ, முதலமைச்சரோ பதில் கூறுவதில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவால் அதானி குடும்பங்கள் மக்கள் பணத்தை கொள்ளையடித்து மோசடி செய்திருக்கின்றன. இதன்மீது நாடாளுமன்ற நிலைக்குழு, சுப்ரீம் கோர்ட் நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், பிரதமர் இதற்கு பதிலளிக்காமல் இருக்கிறார். இதன்மூலம் அதானி குடும்பத்துக்கு பிரதமர் உறுதுணையாக இருப்பது தெரியவந்திருக்கிறது. காரைக்காலில் ரயில்வே, நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு ஏரியில் மண் அள்ளுவதில் முறைகேடு நடக்கிறது. அதில் அமைச்சர் குடும்பத்துக்கும் தொடர்பிருக்கிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்டாயத் திருமணம் போன்றது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பிரியலாம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும்விதமாக புதுச்சேரி பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் சாமிநாதன், “புதுவை மாநிலத்தில் கடந்த 18 மாதங்களாக நடைபெற்று வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மீது தெரிவிக்கும் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிரூபிக்க தயாரா... புதுவை மாநிலத்துக்கு தனி கணக்கை ஆரம்பித்து 70 சதவிகித மானியத்தை 30 சதவிகிதமாக மாற்றி மாநிலத்துக்கு ரூ.10,000/- கோடி கடன் சுமையை ஏற்படுத்தியது நாராயணசாமியும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரமும்தான். ஏ.எஃப்.டி பஞ்சாலைக்கு மூடு விழா நடத்தப்பட்டதும், ரேஷன் கடைகள் மூடப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சியில்தான். இதையெல்லாம் மறைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மீது வீண்பழி சுமத்துவதில் கைதேர்ந்தவர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி.
புதுவை எம்.பி-யாக இருக்கும் வைத்திலிங்கம் அவர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன பணிகள் செய்தார் என்று கூற முடியுமா... மீட்டர் கேஜ் ரயில் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்றியது வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுதான். ஆனால் அதனை காங்கிரஸ்காரர்கள் செய்ததாக தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக புதுவையை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியினால், ஏதேனும் தொழிற்சாலைகள் வந்திருக்கிறதா... எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்... கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன்... தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 10,000 அரசுப் பதவிகளை நிரப்புவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஒரு முறையாவது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறாரா... இலவச அரிசிக்கான பணத்தை 36 மாதங்களாக கொடுக்காமல் இருந்ததுதான் காங்கிரஸ் அரசு.
புதுவை மாநிலத்தை சீரழித்தது காங்கிரஸ் அரசுதான். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருந்த சிறப்பு பொருளாதார மண்டலம், சுங்க வரியில்லா துறைமுகம் அனைத்தையும் தடுத்து நிறுத்தியது காங்கிரஸ் ஆட்சிதான். காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் ஜிப்மர் மருத்துவமனையின் கிளைகளை கொண்டு வந்தது மத்திய பா.ஜ.க அரசு. இதையெல்லாம் மறைத்து கபட நாடகம் ஆடி வருகிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி. கடந்த ஆட்சியில் இலவச அரிசி மற்றும் துணை டெண்டரில் முறைகேடு, சுனாமி குடியிருப்பில் முறைகேடு என பல ஊழல்களை செய்து அதிகமான சி.பி.ஐ விசாரணையை சந்தித்தது நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுதான். அதுமட்டுமின்றி அவர் தனியார் கல்லூரியில் லஞ்சம் பெற்ற பணத்தில்தான் வெற்றி பெற்றார் என அவர் கட்சி எம்.எல்.ஏ-க்களே சட்டப்பேரவையில் குற்றம்சுமத்தியதை மக்கள் மறந்துவிடவில்லை. மக்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரியும். அதனால்தான் கடந்த தேர்தலில் ஒரு காங்கிரஸ் வேட்பாளர்கூட வெற்றி பெறவில்லை என்பதை முன்னாள் முதல்வர் நாராயணசாமி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
from Tamilnadu News