மத்திய அரசு சார்பாக மத்திய பட்ஜெட்- 2023 தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கலவையான கருத்துகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் இது பெரும்பான்மை இந்திய மக்களுக்கு 'துரோகம்' இழைத்த 'இரக்கமற்ற' பட்ஜெட் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், ``மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என உணர்ந்து கொள்வதில் பாஜக அரசு விலகிவிட்டது. இந்தப் பட்ஜெட் ஏழைகள், வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்கள், வேலை இழந்த தொழிலார்கள், வரி செலுத்துவோர், இல்லத்தரசிகள், சமத்துவமின்மை பேசும் சாமானியனுக்கான பட்ஜெட் அல்ல. இது முற்றிலும் பெரும்பான்மை மக்களுக்கு செய்த நம்பிக்கை துரோகம் மற்றும் ஏழைகள் பணக்காரர்கள் இடைவெளியை மேலும் அதிகரிக்கும் 'இரக்கமற்ற பட்ஜெட்'”என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், ``எந்த வரியும் குறைப்பதற்கான அறிவிப்பு இல்லை. ஆனால் புதிய வரிகள் திணிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'வேலையின்மை', 'வறுமை', 'சமத்துவமின்மை' போன்ற வார்த்தைகளை உரையில் பயன்படுத்தவே இல்லை. ஆனால், இந்திய மக்கள் மீதுள்ள கருணை அடிப்படையில் இருமுறை "ஏழை" என்னும் வார்த்தைப் பயன்படுத்தி இருக்கிறார். இதில் இருந்து, உண்மையில் மக்கள் மீது யாருக்கு அக்கறை இருக்கிறது யாருக்கு இல்லை என்பதை இந்திய மக்கள் நன்கு அறிந்து கொள்ளலாம்", என கூறினார்.
from Latest News