சேலத்தில் ஆதார் எண்ணை பதிவுசெய்ய வந்துள்ளதாகக் கூறி, மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அம்மாபேட்டை பெரியகிணறு தெருவில் தனியாக வசித்து வருபவர் மூதாட்டி லட்சுமி. அவரது வீட்டிற்கு சென்ற அடையாளம் தெரியாத பெண் ஒருவர், ஆதார் எண்ணை எங்களிடம் இந்த இடத்தில் பதிவு செய்தால் மாதம் 500 ரூபாய் வரும் என்று தெரிவித்து மூதாட்டியிடம் ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கூறியுள்ளார்.
அப்போது அதை நம்பிய மூதாட்டி வீட்டினுள் சென்று ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்தை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், ஆதார் அட்டையை கீழே தவறவிடுவது போல் நடித்த அந்த பெண், ஆதார் அட்டையை எடுக்க மூதாட்டி கீழே குனிந்தபோது வீட்டிற்குள் நுழைந்து ஒரு சவரன் தங்கத்தோடு மற்றும் 20 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு அந்த பெண் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மூதாட்டி லட்சுமி அம்மாபேட்டை காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின்பேரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண் யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News