பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டம் அமையவிருக்கும் ஏகனாபுரம் பகுதியில் எவ்வித பத்திரப்பதிவும் நிறுத்தப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏகானாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி கேட்டிருக்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையமானது 4,750 ஏக்கர் பரப்பளவில் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் பகுதியில் அமையவிருப்பதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்திருந்தன. இந்த திட்டத்தில் பாதிப்படைவோம் எனக்கூறி ஏகனாபுரம், மேலேறி, நாகப்பட்டு, நெல்வாய், குணகரம்பாக்கம் உட்பட 13 கிராமத்தை சேர்ந்த மக்கள் பல்வேறு வகையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதில் ஏகானபுரம் உள்ளிட்ட ஒருசில கிராம மக்கள் மாலை நேரங்களில் அடையாள போராட்டத்தினையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அண்மையில் பத்திரப்பதிவு துறையின் சார்பில், “பரந்தூர் பசுமை விமான நிலையமானது அமைக்கப்படவிருப்பதாகக் கூறப்படக்கூடிய 13 கிராம பகுதிகளிலுள்ள இடங்களை கிரையம் வாங்கவோ, விற்கவோ, தான செட்டில்மண்ட் செய்யவோ, அடமானம் வைக்கவோ பத்திரப்பதிவு தடையில்லா சான்று பெற்ற பின்னரே அதன் பத்திரப்பதிவு செய்யப்படும்” என்கிற தகவல் ஒன்று வெளியானது. இதற்கு அந்த கிராமங்களிடையே எதிர்ப்புகள் கிளப்பியிருந்தன.
இந்த நிலையில் இதுகுறித்து ஏகனாபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் “ஏகானாபுரம் கிராம பகுதிக்குட்பட்ட நன்செய், புன்செய், கிராம நத்தம் ஆகியவற்றில் அடங்கியிருக்கக்கூடிய சர்வே எண்கள் கொண்ட எந்த நிலத்தையும் கிரையம் செய்வது, தான செட்டில்மென்ட் செய்வது, பாகப்பிரிவினை செய்வது, அடமானம் வைப்பது... போன்ற எல்லாவித பத்திரப்பதிவுகளும் எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? அந்த உத்தரவை பிறபித்த அரசு அதிகாரியின் விவரம், அதற்கான நகல், அதே போல எந்த தேதியிலிருந்து எகனாபுரம் பகுதியில் பத்திரபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, 1.09.22 முதல் 28.12.22 தேதி வரை பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள விவரம் என்ன?” என கேட்டுள்ளார்.
இதற்கு பொது தகவல் அலுவலர் எண்-4 சார்பதிவாளர் கொடுத்திருக்கக்கூடிய பதில் அறிக்கையில், “ஏகனாபுரம் எல்லைக்குட்பட்ட நிலங்களை பதிவு செய்வதற்கு எந்த பதிவு நடவடிக்கையும் நிறுத்திவைக்கப்படவில்லை. எந்த அதிகாரிகளிடமிருந்தும் அந்த உத்தரவானது வரப் பெறவில்லை. அதே போல 1.09.22 முதல் 28.12.022 வரை மூன்று ஆவணங்கள் பதிவாகியுள்ளது” என ஏகனாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டப்பட்ட கேள்விகளுக்கு பதிலானது கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் அப்பகுதியில் ஏகனாபுரம் பகுதியில் எவ்வித பத்திரப்பதிவும் நிறுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News