தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் உள்ள ஆட்டுச் சந்தைகளில் தூத்துக்குடிவ மாவட்டம் எட்டயபுரம், ஆட்டுச்சந்தை சிறப்பு வாய்ந்தது. வாங்குவோர் விரும்புகிற இன ஆடுகள், திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமில்லாமல், விற்போருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால்தான், ஆடு வியாபாரிகள் அதிகளவில் இங்குக் கூடுகிறார்கள்.
எட்டயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட மகாகவி பாரதியார் பேருந்து நிலையத்திற்குப் பின்புறம் வாரந்தோறும் சனிக்கிழமை இயங்கி வருகிறது இந்த ஆட்டுச்சந்தை. தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய தாலுகாக்களில் மானாவாரி விவசாயம் நடந்து வருகிறது. மழையை மட்டுமே நம்பிய இந்த விவசாயத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் விவசாயிகளுக்கு நஷ்டம்தான்.
அதனால், மானாவாரிப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், மானாவாரி விவசாயத்தை மட்டும் நம்பி இருக்காமல் உப தொழிலாக ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். வெளி மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக வரும் ஆடுகளை விட, இதுபோன்ற மானாவாரிப் பகுதிகளில் இருந்து விற்பனைக்காக வரும் ஆடுகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளை விட, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தச் சந்தையில் ஆடுகள் விற்பனை கூடுதலாக நடைபெறும்.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தையில் இன்று ஆடு விற்பனை நடந்தது. திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை என தென் மாவட்டங்கள் மட்டுமில்லாம, பிற மாவட்டங்கள்ல இருந்தும் ஆடு வளர்க்கிறவங்க, ஆட்டு வியாபாரிங்க விற்பனைக்காக வந்தனர். சனிக்கிழமை சந்தை முறையினாலும்கூட, வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே ஆடுகள் வரத் தொடங்கியது.
விருதுநகரைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி சாமுண்டியிடம் பேசினோம், “தென் மாவட்டங்கள்ல மத்த ஆட்டுச்சந்தையில கிடைக்காத ஆட்டு இனங்கள் கூட இந்தச் சந்தையில கிடைக்கும். நாட்டு இனங்களான கன்னி ஆடுகள், கொடி ஆடுகளில் கரும்போர், சிவலைப் போர் ஆகிய இரண்டு வகைகளின் வரத்தும் அதிகமா இருந்துச்சு.
வெம்பூர் வெள்ளை, ராமநாதபுரம் வெள்ளை, மேச்சேரி, கச்சகட்டி, செவ்வாடு, அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு, திருச்சி கருப்பு, கோயமுத்தூர் குரும்பை உள்ளிட்ட பல ரகங்கள் விற்பனைக்காக வந்திருக்கு. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.6,000 முதல் 7,500 வரைக்கும் விலை போச்சு. ஆடுகளோட எண்ணிக்கை அதிகமா இருந்தாலும் போன வருஷத்தை விட இந்த வருஷம் ஆட்டு விற்பனை மந்தம்தான். மொத்தமா 3 கோடி ரூபாய்க்குதான் ஆட்டு விற்பனை நடந்திருக்கு” என்றார்.
from மாவட்ட செய்திகள்