வேப்பூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு மூன்றாவதும் பெண் குழந்தை என்பது தெரிய வந்ததன் பேரில், கருக்கலைப்பு செய்ததால் தொடர் ரத்தப்போக்கு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தம்பதி கோவிந்தராஜ்-அமுதா( 28 ). இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தை இருந்த நிலையில், தற்போது கருவுற்று 4 மாத கர்ப்பிணியாக இருந்த அமுதா கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் வடிவேலன் என்பவரின் மருந்தகத்தில் சட்ட விரோதமாக பாலினத்தை அறிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதில் பெண் குழந்தை என தெரியவரவே அங்கேயே இரண்டு நாட்களுக்கு முன்பு சட்ட விரோதமாக மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான கீழக்குறிச்சி கிராமத்துக்கு வீட்டுக்கு வந்தவுடன் இரண்டு நாட்களாக ரத்தப்போக்கு தொடர்ந்து இருந்து உள்ளது.
இந்நிலையில், இன்று மாலை உடல் நிலை மோசமான நிலையில், வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அமுதா உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
வேப்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய அளவு விழிப்புணர்வு இல்லாததால் தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு நடப்பது தொடர்கதையாக உள்ளது. தமிழக சுகாதாரத்துறை தீவிர ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News