ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் நெகிழி பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உறுபத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் சீனிவாசன் ஆஜராகி, “நெகிழி பொருட்களுக்கு மாற்றாக பாக்கு மட்டையில் செய்த பொருட்கள், மண் குடுவை போன்ற என்னென்ன பொருட்கள், எங்கெங்கு கிடைக்கும் என்பது குறித்த பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது, நெகிழி தடையை அமல்படுத்த தீவிரம் காட்டிவருகிறோம்.” உயர் நீதிமன்ற வளாகத்தில் நெகிழி பாட்டில்களை சேகரிக்கும் இயந்திரங்களை அக்டோபர் 28-ம் தேதி வைக்கப் போவதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் மீதான தடையை முறையாக அமல்படுத்தும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாற்று பொருட்கள் குறித்து பிரபலப்படுத்துவது தொடர்பான மாசுகட்டுப்பாட்டு வாரிய நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியின் பயன்பாடு இன்னும் குறையவில்லை என்றும், அதன் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது என்றும், அதை தயாரிக்கும் உற்பத்தி நிறுவனங்கள் எத்தனை இயங்குகின்றன என்றும் கேள்வி எழுப்பினர். பதிவு செய்யப்படாமல் செயல்படும் நிறுவனங்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்றும், எத்தனை நிறுவனங்கள் உள்ளன என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். அப்போது, 180 நிறுவனங்கள் மூடப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வழக்கறிஞர்கள் பதிவு நிகழ்ச்சி முடிந்த பிறகு, அதிக நெகிழி பயன்படுத்தப்படுவதாகவும், நிகழ்ச்சிக்கு பிறகு உயர் நீதிமன்ற வளாகம் குப்பை காடாகிவிடுவதாகவும் குறிப்பிட்டனர்.
அப்போது பார் கவுன்சில் தரப்பில் வழக்கறிஞர்கள் எம்.வேல்முருகன், சந்திரசேகர் ஆகியோர் ஆஜராகி, இதுகுறித்து வழக்கறிஞர் பதிவுக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்ததுடன், முதன்முறை பட்டதாரி என்ற முறையில் பாராட்ட வருவோரும், குடும்பத்தினரும் பரிசு பொருட்களை வாங்கி வருவதால் குப்பை சேர்வதாக தெரிவித்தனர். வழக்கறிஞர் பதிவு செய்பவர்களை மட்டும் நிகழ்ச்சிக்கு ஏன் அனுமதிக்கக் கூடாது என பரிசீலிக்கும்படி அறிவுறுத்தினர்.
மேலும் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை வெளியிடும்படி சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News