கண்ணாடி பாலத்தில் நடப்பதைப் போன்ற காட்சிகளை சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் பார்த்திருப்போம். அதுபோன்ற கண்கவர் பொழுதுபோக்கு அம்சம் சென்னை வில்லிவாக்கத்தில் அமைக்கப்பட்டுவருகிறது.
வில்லிவாக்கம் ஏரியில் 19. 6 ஏக்கர் பரப்பில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு வருகின்றன. தொங்கும் கண்ணாடி பாலம், உள்ளரங்க விளையாட்டுகள், மெய் நிகர் திரையரங்கம் என அனைவரையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டு வருகிறது வில்லிவாக்கம் பொழுதுபோக்கு பூங்கா. இடது புறம் பாடி மேம்பாலத்தின் பரபரப்பாக செல்லும் வாகனங்கள், வலது புறத்தில் ரம்யமான வில்லிவாக்கம் ஏரி.. இதற்கு இடையில்தான் அமைக்கப்பட்டு வருகிறது இந்த பொழுதுபோக்கு பூங்கா.
சென்னை மாநகராட்சி தனியார் நிறுவனத்தோடு இணைந்து அரசு மற்றும் தனியார் நிதியில் இணைந்து (அரசு தனியார் பங்களிப்பு திட்டம்) வில்லிவாக்கம் ஏரியில் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான முயற்சியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறது. மொத்தமாக 39 ஏக்கர் அளவு கொண்ட வில்லிவாக்கம் ஏரியின் 19. 6 ஏக்கர் அளவிற்கு பொழுதுபோக்கு பூங்காவானது அமைக்கப்பட உள்ளது. நீர் நிலைக்கு அருகே உள்ள 9 ஏக்கர் பரப்பில் குழந்தைகளுக்கான உள்ளரங்க விளையாட்டுகளும், உணவு திடலும் அமைக்கப்பட உள்ளன. சுமார் 100 கோடி மதிப்பில் பொழுதுபோக்கு பூங்கா அமைகிறது.
குழந்தைகள் விளையாடக்கூடிய 70 புதிய உள்ளரங்க விளையாட்டுகளுக்கான மேடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மெய் நிகர் திரையரங்கமும், செயற்கை பனி அரங்கமும் அமைக்கப்பட உள்ளன. 350 மீட்டர் நீளம் கொண்ட கண்ணாடி இழைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஏரியின் அழகையும் புதிய அனுபவத்தையும் கொடுக்கும் இந்தப் பாலம் ஆனது ஒரே நேரத்தில் 50 பேர் பயணிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. கண்ணாடி இழை பாலம் மட்டும் 15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கண்ணாடி மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீர்நிலைப் பகுதிகளில் பறவைகள் வந்து அமர்வதற்கான திடலும் சூழலும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 50 படகுகள் மூலம் வில்லிவாக்கம் ஏரியில் பார்வையாளர்கள் சவாரி செய்யும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளது. மேலும் வரும் பார்வையாளர்களுக்கு மீன் பிடிக்கும் அனுபவத்தை தரும் வகையில் மீன்பிடி திடல்களும் அமைக்கப்பட உள்ளது. ஏரியில் நாட்டு மீன் வகைகள் மட்டுமே வளர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட பொழுதுபோக்கு பூங்கா கட்டுமானத்தில் உள்ளரங்க விளையாட்டுகள் உள்ள நிலையில் அடுத்த கட்ட பணியின் போது பெரிய விளையாட்டுகளும் பொழுதுபோக்கு அம்சங்களும் கூடுதலாக இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக வில்லிவாக்கம் ஏரிக்கு அருகே உள்ள 120 குடிசைப் பகுதிகளில் உள்ள மக்கள் மறுகுடியிருப்பு செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் வந்து கண்டு களிக்கும் வகையில் குறைவான கட்டணங்களோடு மிகுந்த பாதுகாப்பு வசதிகளோடும் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வில்லிவாக்கம் ஏரியின் ஒரு பகுதி பொழுதுபோக்கு பூங்காவாகவும், மற்றொன்று குடிநீர் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றப்பட உள்ளது. முதற்கட்டப் பணிகள் முடிவடைந்து அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் பொழுதுபோக்கு பூங்காவின் ஒரு பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் மற்ற பகுதிகளில் ராட்சத ராட்டினங்கள் அமைக்கும் பணிகள் அடுத்தடுத்த கட்டங்களாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
- ந.பால வெற்றிவேல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News