முதுமலை வனப்பகுதியில் தண்ணீரில் அடித்து வரப்பட்ட குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி இரண்டாவது நாளாக தொடர்ந்தது. இதனையடுத்து குட்டி யானைக்கு குளுக்கோஸ், இளநீர் உள்ளிட்ட திரவ உணவுகளும், சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வன பகுதிக்குள் உள்ள சிங்கார வனப்பகுதியில் நீரோடையில் அடித்து புறப்பட்ட சிறந்த நான்கு மாதமே ஆன குட்டி யானையை நேற்று காலை வனத்துறையினர் வீட்டனர். குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டனர். நேற்று இரவு சீகூர் வனப்பகுதியில் தனியாக நின்ற பெண் யானையை குட்டியின் தாய் எனக்கருதி அதன் அருகே குட்டி யானையை விட்டு விட்டு வந்தனர்.
குட்டி யானை, பெண் யானை அருகில் சென்றநிலையில் அது தாய் யானை தான் என கருதி வனத்துறையினரும் வனப்பகுதியில் இருந்து திரும்பினர். காலை குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க சென்றபோது, அது மீண்டும் தனியாக மரத்தடியில் நின்றது தெரியவந்தது. மீண்டும் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் அதற்கு தேவையான சிகிச்சை அளித்துள்ளனர். குட்டி யானைக்கு குளுக்கோஸ், இளநீர் உள்ளிட்ட திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. வனத்துறையினர் ஆறு குழுக்களாக பிரிந்து வனப்பகுதிக்குள் குட்டி யானையின் தாய் இருக்கும் இடத்தை தேடி வருகிறார்கள். குட்டி யானையை அதன் தாயுடன் சேர்ப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News