“நிறம் மாறும் அரசியல் பச்சோந்திகளில் முதன்மையானவர் கேபி.முனுசாமி” என்று பெங்களூரு புகழேந்தி விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுகவின் இபிஎஸ் ஆதரவாளரான கேபி.முனுசாமி, ஓபிஎஸ் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான பெங்களூர் புகழேந்தி ஓசூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அரசியலில் நிறம் மாறும் பச்சோந்திகள் பல உண்டு. அதில் ஒரு பச்சோந்தி கேபி.முனுசாமி. அவர் இப்போது தியாகத்தை பற்றி பேசி வருகிறார். அதிமுகவுக்காக எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர்; ரத்தம் சிந்தி உள்ளனர். ஆனால் கே.பி.முனுசாமி அப்படியானவரல்ல.
இதே முனுசாமி ஓபிஎஸ்-உடன் இணைந்திருந்த போது, `ஓபிஎஸ்-ஐ போல ஒரு தலைவரை பார்க்க முடியாது, தமிழகத்தில் எந்த தொகுதியில் ஓபிஎஸ் நின்றாலும் வெற்றி பெறுவார், துணிச்சல் இருக்கிறதா எடப்பாடி பழனிசாமிக்கு?’ எனக் கேள்வி கேட்டார். இப்போது அதற்கு எதிராக எடப்பாடி அணிக்கு சென்று தற்போது அதே டயலாக்கை எடப்பாடி பழனிச்சாமிக்காக பேசி வருகிறார்.
கே.பி.முனுசாமியிடம் கேட்கிறேன்... நீங்கள் என்ன தியாகம் செய்தீர்கள்? கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளை அடக்கி ஆண்டு ஏமாற்றி வருகிறீர்கள். முன்பு அம்மாவை ஏமாற்றி சம்பாதித்தீர்கள், இப்போது செட்டில் ஆகிவிட்டீர்கள். நீங்கள் அமைச்சராக இருக்கும்போது உங்களுக்கு அரசியல் வாழ்வு கொடுத்தவர் ஓபிஎஸ். ஆனால் நிறம் மாறும் அரசியல் பச்சோந்திகளில் முதன்மையானவராக இருந்துவிட்டு, இப்போது அண்ணன் ஓபிஎஸ்ஐ பற்றி பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை” என்றார்.
மேலும் புகழேந்தி பேசுகையில், “எடப்பாடி பழனிசாமியை ஒழிக்க வேண்டும் என்று அந்த அணிக்கு சென்று இருக்கின்றீர்கள் கே.பி.முனுசாமி. அவரை முழுமையாக ஒழித்து விடுங்கள். அந்த வேலையை முதலில் பாருங்கள்... ஓபிஎஸ் உங்களை பற்றி எல்லாம் அனாவசியமாக பேசுவதே இல்லை” என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News