தூத்துக்குடியில் போதை தரக்கூடிய மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனைசெய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் உத்தரவுப்படி மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் ஒருவர் பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காளிராஜ் மகன் சுப்புராம் (24) என்பதும், மற்றொருவர் போல்பேட்டையைச் சேர்ந்த சஞ்ஜீவி மகன் குமரேசன் (55) என்பதும் தெரியவந்தது.
அந்த இருவரையும் சோதனை செய்ததில் சுப்புராமிடம் டயாஸெபம் எனப்படும் 47 மாத்திரைகளும், குமரேசனிடம் நைட்ராஸெபம் எனப்படும் 39 மாத்திரைகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த மாத்திரைகளை சுப்புராம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் என்.ஜி.ஓவாக உள்ள தெற்கு புதுத்தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் ரமேஷ் (57) என்பவரிடம் வாங்கியதாகவும், குமரேசன் தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தக மருந்தாளுநரான கோரம்பள்ளத்தைச் சேர்ந்த பதிபூரணம் என்ற ராஜாத்தி (43) என்பவரிடமிருந்து வாங்கியதாகவும், மாத்திரைகளை தேவைக்கு அதிகமாக உட்கொண்டால் போதை உண்டாகும் என்பதால் இவற்றை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் சுப்புராம், குமரேசன் மற்றும் ரமேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 86 மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களில் இதுபோன்ற போதை தரக்கூடிய மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையில்லாமல் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News