நுண்ணூட்ட பொருட்கள் வாங்கினால் தான் யூரியா, டிஏபி உரங்கள் விற்கப்படும் என திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் உரக் கடை விற்பனையாளர்கள் கூறியுள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள், பயிர்களுக்கு இடக்கூடிய மிக முக்கியமான உரங்களான யூரியா, டிஏபி கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான உரக்கடைகளில், 400 முதல் 500 ரூபாய் மதிப்பிலான நுண்ணூட்ட பொருட்களை வாங்கினால் மட்டுமே யூரியா, டிஏபி போன்ற உரங்களை தர முடியும் என்கின்றனர் கடைக்காரர்கள்.
சில தனியார் உரக் கடைகளில் யூரியா, டிஏபி போன்ற உரங்கள் இல்லை. ஏனென்றால் மொத்த வியாபாரிகள் நுண்ணூட்ட பொருட்களை வாங்கினால் தான், யூரியா, டிஏபி கொடுக்கப்படும் என்று வலியுறுத்துவதாக உரக்கடைக்காரர்கள் கூறுகின்றனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் குறுவை மானிய தொகுப்பு உரம் மட்டுமே வழங்கப்படுகிறது. பணத்திற்கு உரத்தை கேட்கும் போது, மானியத்திற்கு கொடுக்கவே போதவில்லை என்கின்றனர் அதிகாரிகள்.
இந்த விவகாரத்தில் அரசு உடனடி நடவடிக்கை எடுத்து தேவையான உரங்களை தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் தனியார் உரக்கடைகளை அணுகும் போது இடுபொருள்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News