அதிக வட்டிதரும் நிதி நிறுவனம் எனக்கூறி கடந்த 7 ஆண்டுகளாக பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த பெண் முகவரிடமிருந்து பணத்தை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் தேனி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தேனி மாவட்டம் போடி அருகே கீழ சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேனி ஆட்சியர் முரளிதரனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில், மதுரை எஸ்எஸ்.காலனியில் Blessing acro farm என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருவதாகவும் அதன் முகவராக பணியாற்றுவதாக எங்கள் கிராமத்தில் வசிக்கும் பிரியா என்பவர் கிராம பொது மக்களாகிய எங்களிடம், இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தினால் அதிக வட்டி போன்று பல சலுகைகள், கிடைக்கப்பெறுவதோடு ஏழு ஆண்டுகளில் பெரிய சேமிப்புத் தொகை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.
அதை நம்பி கிராம மக்களாகிய நாங்கள் பிரியா என்ற முகவரிடம் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து ஏழு ஆண்டுகளாக மாதம்தோறும் இயன்றவரை மாதம் 2000 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தி வந்தோம். ஒவ்வொருவருக்கும் உதவித் தொகை ஒரு லட்சத்தில் துவங்கி 5 லட்சம் ரூபாய் வரை இருக்கும். இதன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஏழாண்டுகள் முடிந்த பின் முதிர்வுத் தொகையை கேட்ட போது எங்களிடம் வாங்கிய தொகையை அந்த நிறுவனத்தில் செலுத்தி விட்டதாக அந்த முகவர் கூறுகிறார். ஏழாண்டுகளாக நாங்கள் கட்டிய தொகையை பெற்றுத் தர வேண்டும். என்று கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் முரளிதரன்இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News